தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அடுத்து வரும் நாட்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.
அதேபோல், தமிழக சட்டமன்றத் தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பணப்பட்டுவாடாவைத் தடுக்க அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக மதுவிலக்கு ஆணையர் கிர்லோஷ் குமார் இன்று (24/03/2021) உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், 'ஏப்ரல் 4- ஆம் தேதி முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மே 2- ஆம் தேதி அன்றும் 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.