Skip to main content

விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழப்பு; உறவினர்கள் மறியல்  

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Three students lost their lives in an accident near Chinnasalem

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது உலகியநல்லூர். கடந்த 14 ஆம் தேதி இரவு அந்த ஊர் வழியாகச் சென்ற விவசாய டிராக்டர் மோதிய விபத்தில் 15 வயது இந்துமணி 17 வயது பச்சையப்பன் 18 வயது மணிகண்டன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து சின்ன சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவத்தன்று இரவே டிராக்டர் ஓட்டுநர் அம்மாசி என்பவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் டிராக்டர் உரிமையாளரைக் கைது செய்யக்கோரி இறந்து போன மாணவர்களின் உறவினர்கள், விருகாவூர் மும்முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி டூ விருத்தாசலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொட்டும் மழையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. வாகன விபத்தில் பலியான மூன்று மாணவர்களின் உறவினர்களிடம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், பெயரளவிற்கு ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்று கூறினர். எனவே அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது குறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ், கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் உடன் இருந்தனர். சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

‘அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி’ - விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Best Scientific Practice Sports Development Authority Notice

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால பயிற்சி முகாம் குறைந்த கட்டணத்தில் அறிவியல் ரீதியிலான சிறந்த பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு வருடமும் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட விளையாட்டுகளில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சென்னையில் அமைந்துள்ள நவீன விளையாட்டு அரங்கங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநர்களைக் கொண்டு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி முகாமில் தகுதி பெற்ற பயிற்றுநர்களைக் கொண்டு விஞ்ஞான ரீதியலான பயிற்சி (காலை, மாலை இருவேளைகளிலும்), சிற்றுண்டி, குடிநீர், பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் மற்றும் சீருடை (T-Shirt) வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மற்றும் நவீன விளையாட்டரங்கங்களில் 2013 ஆம் ஆண்டு முதல் கோடைகால பயிற்சி முகாமிற்கான பயிற்சி கட்டணம் பெறப்பட்டு வந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2013 ஆம் ஆண்டு டென்னிஸ் ரூ.1,500/-ம் இறகுப்பந்து ரூ. 1,000/- ம் கிரிக்கெட் ரூ.500/-ம் போல ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெவ்வெறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டில் தடகளம், வாள் விளையாட்டு, கைப்பந்து, கையுந்துப்பந்து விளையாட்டுகளுக்குத் தலா 500/- ரூபாயும் கிரிக்கெட், கால்பந்து, ஜிம்நாஸ்டிக்ஸ், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 1000/-மும் டென்னிஸ் ரூ. 1,500/-ம் இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு ரூ. 2000/- வரை பயிற்சிக் கட்டணமாக பெறப்பட்டு வந்தது. 

Best Scientific Practice Sports Development Authority Notice

ஆனால், மாணவ மாணவியரிடையே பெருகி வரும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த பயிற்றுநர்கள் காலி இடங்களில் பல்வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 76 பயிற்றுநர்களின் சேவை மாணவ, மாணவியர்க்கு கிடைக்கும் வகையிலும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வசதிகளில் விளையாடும் வாய்ப்பை மாணவ மாணவியர்க்கு அளிக்கும் வகையிலும் இந்த ஆண்டு 29.04.2024 முதல் 13.05.2024 வரை நடைபெறவுள்ள கோடைகால பயிற்சி முகாமில், ஏற்கெனவே. வெவ்வேறு பயிற்சிக் கட்டணம் (அதாவது ரூ.200/-லிருந்து ரூ.2000/- வரை) நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை தற்போது முறைப்படுத்தி அனைவரும் பயன் பெறும் வகையில் சென்னையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே கட்டணமாக ரூ.500, பிற மாவட்டங்களில் ரூ.200 மட்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் அறிவியல் ரீதியிலான பயிற்சி, விளையாட்டு சீருடை, சிற்றுண்டி, சான்றிதழ்கள் போன்றவை மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

2013-ஆம் வருடம் முதல் 2019ஆம் ஆண்டு வரை (2016 ஆம் வருடம் நீங்கலாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு) மாவட்ட தலைநகரங்களுக்குச் செலவினத் தொகையாகத் தலா ரூ. 8,000/- வரை வழங்கப்பட்டு வந்தது. 2020-2022 வரை கொரோனா காலத்தில் பயிற்சி முகாம் நடைபெறவில்லை. 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோடைக்கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. இதற்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் சென்னையில் உள்ள நவீன விளையாட்டரங்களுக்கும் செலவினத் தொகையாக ரூ.15,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டு அனைத்து விளையாட்டு வசதிகளுடன் 18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி முகாம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. 2024 ஆம் ஆண்டும் இப்பயிற்சி முகாம் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ரூ.15,000/- அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.