வேலூர் காட்பாடி பகுதியில் உள்ளது விஐடி தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம். 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு - வெளிநாட்டு மாணவ-மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். லட்சக்கணக்கில் நன்கொடை, கட்டணம் செலுத்துபவர்கள் மட்டுமே இதில் பயில முடியும். நாட்டில் போபால், சென்னை உட்பட வேறு சில இடங்களிலும் வி.ஐ.டி கல்வி நிலையம் செயல்படுகிறது. வேலூர் பல்கலைக்கழகத்தின் மீது அரசு நீர்நிலை பகுதிகள் ஆக்கிரமிப்பு உட்பட சில குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் உண்டு.
இந்நிலையில், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. விஐடி பல்கலைக்கழகத்தின் இமெயிலுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக விஐடி பல்கலைக்கழகத்தின் மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு நேற்று மாலை புகார் அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட ஆறு குழுக்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட போலீசார் விஐடி பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்று பல்கலைக்கழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். போலீசார் மற்றும் பல்கலைக்கழகத்தின் தரப்பில் மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். நள்ளிரவு வரை தொடர்ந்த சோதனையில் எந்த ஒரு வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.