கள்ளக்குறிச்சி கருணாபுரதில் விசசாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு கலாச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
பின்னர் பேசிய திருமாவளவன், கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்தது இந்தியாவையே அதிர்ச்சிக்குள் ஆக்கியது. இந்த கள்ளச்சாராயம் மட்டுமில்லாமல் மதுவால் தற்போதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என அக்டோபர் 2 தேதி கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் ஒழிப்பது தொடர்பாக அரசுக்குக் கோரிக்கை வைக்கும் மாநாடாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மது மற்றும் போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என அனைத்து அமைப்புகள் பலதரப்பட்ட கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படும் அறைகூவல் விடும் மாநாடாக நடைபெறும் ”எனத் தெரிவித்தார்.
பின்னர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பங்களில் 10 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் அவர்களுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தும் விதமாக மேடையில் அவர்களிடம் கருத்துக் கேட்பு நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஆட்சி வந்தாலும் மதுவை ஒழிக்கிறோம் என வாக்குறுதி மட்டுமே கொடுத்து வாக்குகளை வாங்கி ஆட்சியில் அமருகின்றனர். ஆனால் யாரும் இதுவரை மதுவை ஒழிக்க வில்லை. மதுக்கடையால் தான் அரசுக்கு வருமானம். அந்த வருமானத்தை மத்திய அரசிடம் பெற்றுக் கொண்டு மதுக் கடையை அகற்ற வேண்டும் என மேடையில் ஆவேசமாகப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இந்த கள்ளச்சாராயத்தாலும், மதுவாலும் பல்வேறு குடும்பங்களில் குழந்தைகள் வாழ்வதற்கு வழி இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் இந்த மதுக் கடையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் திருமாவளவனிடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் மது கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இருக்க வீடு மற்றும் குழந்தைகளுக்கு கல்விச்செலவை ஏற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இந்த கூட்டத்தில் மது ஒழிப்பு மாநாடு உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் என திருமாவளவன் அறிவித்தார்.