மதுரை ஆவினில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அலுவலர் ஒருவரே வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஆவினில் விரிவாக்க அலுவலராக பணியாற்றி வருபவர் ஜஸ்டின் ஜான் தேவசகாயம். மதுரை ஆவினில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக சொல்லி வீடியோ ஒன்றை ஜான் தேவசகாயம் வெளியிட்டு இருந்தார். அண்மையில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பால் ஏற்றிச் செல்லும் வாகனத்தை நடுவழியில் நிறுத்தி ஒருவர் பாலில் தண்ணீரை கலக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்த வீடியோவை வெளியிட்ட தேவசகாயம், ''பால் குவாலிட்டி குறையுது என மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோதனை செய்யும் போது ஒரு சொசைட்டியில் வண்டியை நிப்பாட்டி கேனில் தண்ணீர் பிடித்து பாலில் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆவின் உயர் அதிகாரிகளும் உடந்தை. போலீசுக்கு போன் பண்ணுங்க. பாலில் தண்ணிய கொண்டு வந்து ஊத்துறதுக்கு ஆவின் சொத்தும் மக்களுடைய பாலும் தான் கிடைச்சதா உனக்கு? பால் உற்பத்தியாளர் வாழ்க்கையை அழிக்க நினைச்ச நீ மனிதனே இல்ல. நீ எதுக்கு தண்ணி ஊத்துன. உன்னை விடமாட்டேன் லோக்கல் ஸ்டேஷனுக்கு போன போடுங்க'' என ஆவேசமாக பேசினார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை வெளியே சொன்னதற்காக தன்னுடைய ஊதியம் நிறுத்தப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ள ஜஸ்டின் ஜான் தேவசகாயம், பால்வளத்துறை இந்த அமைச்சர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.