தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.
தச்சுத் தொழிலாளியின் மகளான நந்தினி 600க்கு 600 எடுத்திருப்பது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் மாணவியை அழைத்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். கடந்த 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் நந்தினியின் உயர்கல்விக்கு உதவுவதாகவும் அதற்கேற்ற கல்வி நிறுவனங்களை விசாரித்து பரிந்துரை செய்வதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மாணவி நந்தினி நேரில் அழைத்துப் பாராட்டிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசிய சைலேந்திரபாபு, ''பன்னிரண்டாம் வகுப்பில் தமிழில் 600 மதிப்பெண் வாங்கி இருக்கிறார். இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. தமிழில் தமிழ்நாட்டிலேயே மூன்று பேர் தான் நூற்றுக்கு நூறு வாங்கி இருக்காங்க. அதில் நீங்களும் 100க்கு 100 மதிப்பெண் வாங்கி இருக்கீங்க. இது மாதிரி சிறப்பாக படிக்க வேண்டும். அதிகமான மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது'' என்று கேட்டார்.
அதற்கு மாணவி நந்தினி, ''எனக்கு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது சிறுவயதிலேயே இருந்ததுதான். என்னுடைய குடும்பச் சூழல் அதற்கு முக்கியமான காரணமாக இருந்தது என நினைக்கிறேன். பெற்றோரின் நிலைமை துவண்டுபோற மாதிரியான விஷயமாக இல்லாமல் அதை நான் தூண்டுதலாக எடுத்துக் கொண்டது படிப்பதற்கு தூண்டுதலாக இருந்தது. இதனால் இவ்வளவு தூரம் இன்று படிக்க முடிந்தது. பெற்றோர், ஆசிரியர்கள் எல்லோருடைய சப்போர்ட் இருந்ததால் என்னால் படிக்க முடிந்தது'' என்றார்.
தொடர்ந்து பேசிய டிஜிபி, ''சிலர் அவர்களது குடும்பச் சூழ்நிலையை நினைத்து வருத்தப்படுவார்கள். படிக்க முடியாது என்று நினைப்பார்கள். வீட்டினுடைய சூழ்நிலை சரியில்லை. பெரிய வருமானம் இல்லை என்பதே படிக்க மோட்டிவேஷன் என்று நந்தினி சொல்லி உள்ளார். வாழ்த்துக்கள்'' என்றார்.