புதிய அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் திமுகவினர் செயல்பட வேண்டும். பவள விழா கொண்டாடும் திமுக தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தை வழங்கிய போதெல்லாம் தொலைநோக்கு திட்டம் மூலம் நாம் அடைந்த வளர்ச்சிதான் இன்றைய தமிழ்நாடு. இன்றைய தினம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். அனைத்து துறை வசதி மூலம் மக்கள் பயனடைந்து வருவதை நேரடியாகப் பார்த்து வருகிறோம். மாநில வளர்ச்சியின் குறியீடாக உள்ள அனைத்திலும் தமிழ்நாடு இன்று சிறந்து விளங்குகிறது. இதை இன்னும் சிறப்பானதாக ஆக்கவே திராவிடம் மாடல் ஆட்சியானது நாள்தோறும் நல்ல பல திட்டங்களைத் தீட்டி வருகிறது. 'எல்லாருக்கும் எல்லாம்' என்று இலக்குடன் திமுக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வளர்ச்சியை ஜனநாயகப்படுத்தி விளிம்பு நிலை மக்கள் ஏழைகளின் வாழ்க்கையில் ஏற்றத்தை உருவாக்கினோம்.
துணை முதலமைச்சர் எனக்கு துணையாக அல்ல; நாட்டு மக்களுக்கு துணையாக இருக்கப் போகிறார். தனக்கு வழங்கப்பட்ட விளையாட்டு துறையின் மூலம் இந்தியாவின் கவனத்தை மட்டுமல்ல உலகின் கவனத்தை ஈர்த்தவர் உதயநிதி. விளையாட்டு துறை மிகக் குறுகிய காலகட்டத்தில் வீறு கொண்டு எழுந்துள்ளது. நாள்தோறும் விளையாட்டு வீரர்கள் பெற்று வரும் பரிசுகள் ஒலிம்பிக்கை நோக்கிய நம் மாநிலத்தின் பயணமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்களை மிக உன்னிப்பாக கவனித்து ஆய்வு செய்து வருகின்றனர். எந்த விமர்சனத்திற்கு ஆளாகாமல் கவனித்து துறையின் மூலம் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பதிவில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்த கழகத் தலைவர், தமிழக முதலமைச்சருக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். நம் முதலமைச்சரின் எதிர்பார்ப்பையும் – நம்பிக்கையையும் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக - அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து அயராது உழைப்பேன் என்ற உறுதியோடு பணிகளைத் தொடர்கிறேன். தமிழ்நாடு வெல்லட்டும்!' என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். நம் முதலமைச்சர் அவர்களின் எதிர்பார்ப்பையும் – நம்பிக்கையையும் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக -… https://t.co/m7kM53vBw0
— Udhay (@Udhaystalin) September 29, 2024