2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் என்.டி.ஏ கூட்டணியில் சார்பில் கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தங்கர் பச்சான், தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டபோது, அப்பகுதியின் சாலை ஓரத்தில் இருந்த கிளி ஜோதிடரிடம் ஜோதிடம் பார்த்தார். அவருக்கு அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என ஜோதிடர் கூறினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள அவர்கள், ஜோதிடமிருந்த 4 கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.