![thanjavur thiruvarur pond side wall incident due to summer rain](http://image.nakkheeran.in/cdn/farfuture/JCJ2KMOxITfSTg2Z6KdLg5hSokyUhNko-d8u4ZSNbUI/1679892841/sites/default/files/inline-images/pond-art.jpg)
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ஏனாதிகரம்பை கிராமத்தில் கடந்த மாதம் கல்லணை கால்வாயில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ஷட்டர்கள் அமைத்ததாக மறைத்து வைக்கப்பட்ட பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், திட்டத்திற்கு ஒதுக்கிய நிதிக்கு சரியான வேலை நடந்துள்ளதற்கு படங்கள் ஆதாரமாக உள்ளதாக அதிகாரிகள் சொன்னார்கள். தண்ணீர் வந்த போது வேலை நடந்ததாக பதாகையில் உள்ளதே என்றால், ஆமாம். தண்ணீர் வரும் நேரத்திலேயே ஷட்டர் மாற்றினோம் என்றனர். புதுக்கோட்டை எஸ்.ஆர் ஃபேப்ரிகேஷன் நிறுவனம் தான் அந்த பணியைச் செய்ததாக பதாகையில் இருந்தது.
அதே போல திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தடுப்புச் சுவர்கள் உள்ள குளங்களில் மீண்டும் தடுப்புச் சுவர்கள் கட்ட ஒப்பந்தம் விடப்பட்ட போதே நிதி வீணாகிறது என்று பிரச்சனை கிளம்பியது. இந்த நிலையில் தான் தாமரைக்குளத்தில் ரூ. 2.20 கோடிக்கு புதுக்கோட்டை கே. இன்பராஸ்டக்சர் நிறுவனம் பணிகள் செய்து கொண்டிருக்கிறது. பணிகள் முடிவடையும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த சாதாரண கோடை மழைக்கே சுவர்கள் சரிந்து கொட்டின. அதே போல ரூ. 84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செங்குளத்திலும் சாய்தளக் கரையில் சரிவு ஏற்பட்டு கற்கள் கொட்டியுள்ளன.
இப்படி கோடி கோடியாக பணத்தைக் கொட்டி தரமில்லாமல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு ஏன் பணிகள் கொடுக்க வேண்டும்? கனமழை பெய்து குளத்தில் தண்ணீர் நிரம்பும் போது உயிர்பலிகள் ஏற்படாமல் எப்படி தடுக்க முடியும்? என்ற கேள்வியும் முன்வைக்கிறார்கள் மன்னார்குடி மக்கள்.