கடலூர் இம்பீரியல் சாலையில் கட்டப்பட்டுள்ளது பிரபல ஜவுளிக்கடையான கே.வி. டெக்ஸ். இந்த கடை கடந்த 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போதே இரண்டாம் தளம் கட்டியதில் விதிமீறல் இருப்பதாக புகார்கள் எழுந்தது. அந்த புகார்களின் அடிப்படையில் பல கட்ட விசாரணைகள் நடைபெற்றது.
அதில் விதிமீறல் இருப்பது தெரிய வந்ததையடுத்து இன்று காலை கடலூர் நகரமைப்பு குழும அதிகாரிகள் சட்டவிதி மீறல்கள் உள்ளதாக அக்கடைக்கு சீல் வைத்தனர். அப்போதே கடை ஊழியர்கள் அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டு விரட்டியடித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் வைத்த சீலை பிரித்துவிட்டு அத்துமீறி உள்ளே நுழைந்த ஊழியர்கள் வழக்கம் போல வியாபாரம் பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் வி.பி.தண்டபாணியிடம் கேட்டதற்கு, " அதிகாரிகள் வைத்த சீலை உடைத்தது உண்மை என்று தெரியவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இதே கே.வி டெக்ஸ் ஜவுளி கடையின் மற்றொரு கிளை கடந்த ஜூன் மாதம் புதுச்சேரியில் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே பார்க்கிங் வசதி செய்யவில்லை என கூறி புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் உத்தரவினால் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் அந்த கடைக்கும் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.