கருணை கொலை செய்ய கோரிய சிறுவனின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மருத்துவ நிபுணர்கள் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.
வலிப்பு நோயாலும், மூளை பாதிப்புக்கு உள்ளாகி உள்ள தனது 10 வயது மகனை , கருணைக் கொலை செய்ய அனுமதிக்க கோரி கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அமர்வு, சிறுவனை பரிசோதனை செய்வதற்கான மருத்துவ நிபுனர்களை பரிந்துரைக்க மூவர் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.
அந்த குழு அளித்த அறிக்கையின்படி, குழந்தைகள் நரம்பியல் துறை ஓய்வுபெற்ற பேராசிரியர் திலோத்தம்மாள், ஸ்டான்லி மருத்துவமனை இயக்குனர் டி.ரவிச்சந்திரன், காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு தலைமை மருத்துவர் பாலராமசாந்திரன் ஆகியோரின் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், சிறுவனை கடலூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிறுவனை பரிசோதனை செய்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ நிபுணர் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிறுவனின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படுமா அல்லது இதேநிலையில் தான் இருப்பாரா என்பதையும், அவரை கவனிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ அல்லது அரசோ விரும்புகிறதா எனவும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.