எங்களால் எந்த தொந்தரவும் இல்லே... அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் கடையில தானே குடிக்கிறோம் அது ஒன்னும் சட்டவிரோதமில்லையே.. என இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நூறுக்கும் மேற்பட்டோர் கோஷம் போட்டு மனு கொடுக்க வந்தனர். தொடர்ந்து அவர்கள் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் சென்று மனு ஒன்றை கொடுத்தனர்.
என்ன மனு என கலெக்டர் கேட்க, ஐயா நாங்களெல்லாம் குடிகாரர்கள். இந்த அரசுக்கு அதிக வருவாய் தருவதும் நாங்கள் தான் என கலெக்டர் கதிரவனை அதிர வைத்த அவர்கள் மேலும் கூறும்போது, "எங்க சொந்த ஊர், பூந்துறையை அடுத்த ராட்டை சுற்றி பாளையம். இந்த பகுதியில் கடந்த இரண்டு மாதமாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. எங்களைப்போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசித்து வருகிறோம். மாலையில் வேலை முடிந்ததும் அலுப்பு தெரியாமல் இருப்பதற்காக ராட்டை சுற்றி பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தான் குடித்து வருகிறோம். எங்களால் யாருக்கும் இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் தொந்தரவும் ஏற்பட்டதில்லை.
இந்த டாஸ்மாக் கடையால் பிரச்சினை ஏற்படுவதாக சிலர் வேண்டும் என்றே கூறி வருகின்றனர். அது தவறான தகவல். இந்த இடத்தில் இருந்து டாஸ்மாக் கடையை அகற்றினால் நாங்கள் மது அருந்த அரச்சலூர் வெள்ளோடு எழுமாத்தூர் மொடக்குறிச்சி போன்ற ஊர்களுக்கு தான் செல்ல வேண்டும். இதற்கு 10 முதல் 15 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். அப்படிப் போய் குடிச்சிட்டு பிறகு வீடு வந்தால் குடிச்ச போதையே தெளிஞ்சு போயிடும் எங்களால் அலைய முடியாது. மேலும் எங்களுக்கு உயிர் பாதுகாப்பு இருக்காது. எனவே தொடர்ந்து அதே பகுதியில் டாஸ்மாக் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது. எங்களுக்கு சவுரியமான டாஸ்மாக் கடையை அங்கிருந்து எடுக்க கூடாது."என்றனர். இதையே அவர்கள் மனுவாகவும் கொடுத்தனர்.
என்ன செய்வது... கோரிக்கை மனு கொடுத்தது நாட்டின் குடி மகன்களாச்சே, ஆகட்டுங்கைய்யா என மனுவை வாங்கினார் ஈரோடு கலெக்டர் கதிரவன்.