தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “3 ஆண்டுகள் எப்படி ஓடியது என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆளுநர் பதவியில் அதிகமாக முதல்வர்களை பார்த்ததில் பெருமை கொள்கிறேன். 4 முதல்வர்களை எனது பதவியின் போது பார்த்து பயணித்துள்ளேன். வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வந்தால், நான் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் இணைந்து 25 ஆண்டுகள் ஆகிறது. மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஆண்டவனும், ஆள்பவனும் தான் முடிவு செய்வார்கள். புதுச்சேரியை வேறு மாநிலம் என்று எப்போதும் பார்த்ததில்லை. தன்னை வேறு மாநிலத்தவர் என்று யாரும் பார்க்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழிசை செளந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி சார்பாக பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில், புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் தூத்துக்குடி அல்லது புதுச்சேரியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகத் தான் மனமுவந்து ராஜினாமா செய்திருக்கிறேன். தெலங்கானா, புதுச்சேரி மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கும் நான் நன்றியுடையவளாக இருப்பேன். மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நான் மக்கள் ஆளுநராக தான் இருந்தேன். என்னுடைய ராஜினாமா ஏற்றுக்கொண்ட பிறகு என்னுடைய எதிர்கால திட்டத்தை பற்றிச் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மக்கள் சேவைக்காக மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலுங்கானா மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. நான் எப்போதும் தெலுங்கானாவின் சகோதரி. அவர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.