தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03.12.2019) விடுமுறை என்று ஆட்சியர்கள் அறிவித்தனர்.

கனமழையால் காரணமாக கடலூர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அதேபோல் கோவையில் பெய்த தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்ததில் சிறுமிகள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சூறைக்காற்று வீசுவதால் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 13 செ.மீ மழையும், ராமநாதபுரம் கெட்டி கே பாலம் பகுதியில் 9 செ.மீ, தரங்கம்பாடி, ஆணைக்காரன்சத்திரம், ராமேஸ்வரம், சீர்காழியில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கோத்தகிரி, பரங்கிப்பேட்டை, திருவாடானை, தொண்டியில் தலா 7 செ.மீ பெய்துள்ளது. வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை இந்த வருடம் அதிகம் பெய்துள்ளது. இவ்வாறு பாலசந்திரன் கூறினார்.