கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.
அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது. இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.