சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களையொட்டி கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி இன்று (18.10.2024) நடைபெறும் இந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சம்பவம் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் வெளியிட்ட அழைப்பிதழில், இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளது.
இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும். இந்தியா போன்ற பல்வேறு மொழியில் பேசும் நாட்டில் இந்திக்கு தனி இடம் அளிக்க இயலாது. அரசமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை தரவில்லை. தகவல் தொடர்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் மொழிகளையும் மத்திய அரசு கொண்டாட வேண்டும். செம்மொழியாக அங்கீகரித்துள்ள அனைத்து மொழிகளையும் சிறப்பிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து மொழிகளையும் சிறப்பிக்கும் போது சமூகமான உறவை மேம்படுத்த முடியும். இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி தின விழா இன்று (18-10-24) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள் தான். இங்கு இந்தி திணிக்கப்படவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்தி கற்க மாட்டார்கள், இந்தி எதிர்ப்பு உள்ளது என்று முன்பு நினைத்திருந்தேன். ஆனால், பல பகுதிகளுக்கு நான் சென்ற பின்னர் தான் தமிழ்நாட்டில் இந்தி மொழியை மக்கள் கற்பது தெரிந்தது. தமிழக மக்களிடையே இந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது. இந்தியா எப்போதும் ஒன்றாகவே உள்ளது. எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. இந்தியாவின் அங்கமாக தமிழ்நாடு எப்போதும் இருக்கும். இந்தியாவின் பெருமை மிகு மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இங்கிருந்து ஆன்மீகம் நாடு முழுவதும் சென்றுள்ளது. தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல என்ன செய்தனர்?. தமிழகத்தில் மட்டுமே 3வது மொழியை அனுமதிக்க மறுக்கின்றனர். பிற மாநிலங்களில் அனுமதிக்கின்றனர். மக்களை கொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர். தமிழுக்காக மத்திய அரசும், பிரதமர் மோடியும் மட்டுமே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்” என்று பேசினார்.