அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக இருக்க வேண்டும் எனத் தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 2023 - 2024 ஆம் கல்வியாண்டுக்காக பள்ளிகள் ஜூன் 1 ஆம் தேதி திட்டமிட்டபடி திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆனாலும் ஆசிரியர்கள் தரப்பில் பள்ளித் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருவதாலும் பள்ளிகளின் திறப்பை ஜூன் 12 ஆம் தேதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆசிரியர்கள் முன் வைக்கின்றனர். இந்நிலையில், அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக இருக்க வேண்டும் எனத் தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2024-2025 கல்வியாண்டுக்குள் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளின் இயக்குநர் பாடத்திட்டம் மற்றும் அதற்கான தேர்வு முறையை நிர்ணயிப்பார். மாணவர்களுக்குத் தமிழ் மொழியைத் திறம்படக் கற்பிக்கத் தகுதியான ஆசிரியர்களைத் தனியார் பள்ளி நிர்வாகிகள் நியமிக்க வேண்டும். 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் கட்டாயமாகக் கூடுதல் மொழியாகத் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.