கடந்த 12 ஆம் தேதி திருவண்ணாமலையில் நான்கு ஏடிஎம்களில் 70 லட்சத்திற்கும் மேலான பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் ஆரிப், ஆசாத் என இரண்டு பேரை ஹரியானாவில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக தமிழக போலீசாரின் தனிப்படை ஹரியானா, குஜராத், கர்நாடகாவின் கோலார் ஆகிய இடங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தியதில் ஹரியானாவில் ஆரிப், ஆசாத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் திருவண்ணாமலை கொண்டு வரப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இருவருக்கும் மார்ச் மூன்றாம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் முக்கிய கொள்ளையர்களான ஆரிப், ஆசாத் ஆகிய இருவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க காவல்துறை அனுமதி கேட்டிருந்த நிலையில், திருவண்ணாமலை நீதித்துறை நடுவர் மன்றம் அதற்கான அனுமதியை அளித்துள்ளது.