திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரண்டு ஹெலிகாப்டர்கள் கிராமப் பகுதியில் தரை இறங்கியது அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ளது இரும்புலி கிராமம் .இந்தக் கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேலும் அந்தப் பகுதி வனம் சார்ந்த பகுதியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று பிற்பகல் திடீரென்று இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அந்தப்பகுதியில் வந்த நிலையில் திடீரென வயல் பரப்பில் தரை இறங்கியது. மேலும் அந்த ஹெலிகாப்டரில் இருந்து சிலர் கீழே இறங்கி உள்ளனர்.
பின்னர் ஒரு ஹெலிகாப்டரில் இருந்து மற்றொரு ஹெலிகாப்டருக்கு ஆட்கள் மாறினர். இதனை அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் வீடியோவாக படம் பிடித்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் அந்தப் பகுதி மக்களுக்கு பரப்பரப்பையும் அச்சத்தையும் கொடுத்தது. உடனடியாக காவல்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் தகவல் போனது. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் இந்த ஹெலிகாப்டர்கள் எங்கிருந்து வந்தது? எதற்காக இந்தப் பகுதியில் தரை இறங்கியது? எதற்காக ஒரு ஹெலிகாப்டரில் இருந்து ஆட்கள் மற்றொரு ஹெலிகாப்டருக்கு மாறினர்? என்பது குறித்து விசாரணை செய்தனர்.
பயிற்சிக்காக வந்த ஹெலிகாப்டரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.