தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக இன்று டெல்லியில் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் அடுத்த தமிழக டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காகத் தற்போதைய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதில் தமிழ்நாடு கேடரில் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாகாத ஐந்து மூத்த அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஆலோசனைக்குப் பிறகு அதில் மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதியில் அதில் ஒருவர் தமிழக டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். தமிழ்நாடு கேடரில் டெல்லி காவல் ஆணையராக உள்ள சஞ்சய் அரோரா, பி.கே. ரவி, தற்போது சென்னை காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன், ஆபாஷ் குமார் ஆகியோர் தமிழ்நாடு கேடரில் மூத்த அதிகாரிகளாக உள்ளனர். இவர்களில் ஒருவரே தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.