இந்து அறநிலையத்துறை சார்பில் பழனியில் இரண்டு நாட்கள் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முதல்நாளன்று, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, பழனி எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் உள்பட ஆதீனங்களும், ஆன்மீக பெரியோர்களும் அதிகாரிகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று(26.8.2024) மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதி அரசர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு மாநாட்டின் மலரினை வெளியிட்டார். இதில் அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, எம்.எல்.ஏ செந்தில்குமார், அதிகாரிகள், ஆன்மீக பெரியோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். பின்னர் மாநாட்டில் பேசிய செந்தில்குமார், “பழனி நவபாசனஞான தண்டாயுதபாணிக்கு பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காமல் இருந்ததையும் தாங்கள் நடத்தி வைத்தீர்கள் அதற்கு நன்றி. சித்தர்கள் வாழ்ந்த மண்ணில் சித்த மருத்துவக் கல்லூரி கொண்டு வந்ததற்கும் நன்றி. பெரும் திருத்தலமாக எடுத்து 58 ஏக்கர் நிலத்தில் எதிர்காலத்தில் இந்தியா ஒன்றியத்தில் திருப்பதிக்கு நிகராக பழனியையும் முதல் திருத்தலமாகக் கொண்டு வர முயற்சி எடுத்ததுக்கும் நன்றி.
அதுபோல் இங்குக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்து இருக்கிறீர்கள் அதுக்கும் நன்றி. அதே போல் இங்கு படிக்கும் ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு கட்டணம் இல்லாமல் வழங்கி இருக்கிறார்கள் அதற்கும் நன்றி. அதேபோல் குழந்தை வேலப்பர் கோவிலுக்கு ராஜா கோபுரம் அமைக்க உத்தரவிட்டிருக்கிறீர்கள் அதற்கும் நன்றி. அதேபோல் 70 லட்சம் செலவில் சாலை அமைக்கவும் உத்தரவிட்டிருக்கிறீர்கள் அதற்கும் நன்றி. அதேபோல் பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள உபகோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டிருக்கிறார்கள் அதற்கும் நன்றி.
இங்கு பேசிய எம்.பி.சாலையோர கடை வியாபாரிகளுக்கு வாழ்வாதாரத்திற்கு வழி செய்து கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அதற்கான வழிவகைகளைச் செய்ய அமைச்சர் தயாராகி வருகிறார் அதற்கும் நன்றி. இந்த மாநாட்டில் வாழ்த்துரை வழங்கிய முதல்வர், கோவிலுக்குதான் சேகர்பாபுவை அமைச்சராக நியமித்தேன். ஆனால் கோவிலில்தான் இருக்கிறார் என்று சொன்னார். அந்த அளவுக்கு அந்தந்த துறைக்கு தகுதியானவர்களைத் தான் முதல்வர் நியமித்திருக்கிறார். இங்கு மாநாடு நடத்த உத்திரவிட்ட முதல்வருக்கும் நன்றி. அதோடு இந்த மாநாடு வெற்றி பெற வைத்த முதல்வருக்கும் நன்றி” என்று கூறினார்.