முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றிருந்த நிலையில், சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் கணித்தமிழும் இணைந்து நற்றமிழாகச் சிறப்புடன் திகழ்கிறது. திமுக பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தனிப்பெரும் நிலையில் தகுதி வாய்ந்த தமிழர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்குவதோடு, தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது, பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்கால தமிழர்களின் எழுத்தறிவு, வாழ்வியல் முறைகளைப் பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்தது.
அதன் தொடர்ச்சியாக 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் நமது பண்பாட்டின் மணிமகுடங்களாகும். வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 5 நாட்கள் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டைத் தொடர்ந்து இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.