கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்த நிலையில் ராமநாதபுரம் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக் கடல் எச்சரிக்கை எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசப்படும், 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும் என்பதால் மக்கள் யாரும் கடல் பகுதிகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நேற்றே ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், கடற்கரைப் பகுதிகளில் இறங்கவும் குளிக்கவும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். நேற்று இரவு முதல் வழக்கத்திற்கு மாறாக காணப்படுகிறது. சூறைக்காற்று வீசுவதால் அந்தப் பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்காமல் கடற்கரை ஓரமாக நின்று பார்த்துவிட்டு செல்கின்றனர்.