Skip to main content

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடித்த மோசடி கும்பல்! போலீஸ் தீவிர விசாரணை!

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

scam gang  loot six lakh rupee Police serious investigation!

 

சேலம் அருகே, குறைந்த வட்டிக்கு 2 கோடி ரூபாய் கடன் கொடுப்பதாக ஆசை வலை விரித்து கோவை வாலிபர்களிடம் 6 லட்சம் ரூபாயை சுருட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் பரணி (20). இவரும், உள்ளூரைச் சேர்ந்த அவருடைய நண்பர்களான அரவிந்த், முரளி, மற்றும் கார்த்திக் ஆகிய நான்கு பேரும் ஒன்றாக கார் மூலம், சேலம் மாவட்டம் அரியானூருக்கு மார்ச் 18ம் தேதி வந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பரணியை சேர்ப்பதற்காக 6 லட்சம் ரூபாயை எடுத்து வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக ஒரு காரில் வந்த சிலர், அவர்களிடம் ஏதோ ஒரு இடத்தைக்கூறி, அதன் முகவரி குறித்து விசாரித்தனர். திடீரென்று அந்த கும்பல், அரவிந்த் கையில் இருந்த 6 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு காரில் மின்னல் வேகத்தில் தப்பினர்.

 

இச்சம்பவம் குறித்து சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணத்தைப் பறிகொடுத்த கும்பல் முன்னுக்குப் பின்னாகப் பேசினர். காவல்துறையினர் விசாரணையின் போக்கை மாற்றிய பிறகு, அவர்கள் பொய்யான தகவல்களைச் சொல்லி புகார் அளித்திருப்பதாக ஒப்புக்கொண்டனர். அதாவது, புகார்தாரர் தரப்பினர் குறைந்த வட்டிக்கு 2 கோடி ரூபாய் கடன் கிடைக்கும் என்று சிலர் சொன்னதை நம்பி பணத்துடன் சேலம் வந்திருப்பதும், வந்த இடத்தில் மர்ம கும்பலிடம் பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, வழிப்பறி செய்து விட்டதாக பொய் புகார் அளித்ததும் தெரிய வந்தது. 


கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு கும்பல், நிதி நிறுவனத்தின் பெயரில், குறைந்த வட்டியில் கடன் தருவதாக பத்திரிகையில் வரி விளம்பரம் செய்துள்ளனர். அதையறிந்த அரவிந்த், முரளி, பரணி, கார்த்திக் ஆகியோர் விளம்பரத்தில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு 2 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று கூறியுள்ளனர். எதிர் முனையில் பேசிய கும்பலோ, குறைந்த வட்டியில் கடன் வேண்டுமெனில் கமிஷனாக 6 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசியுள்ளனர். அதற்கு ஒப்புக்கொண்ட பிறகே, புகார்தாரர் தரப்பு பணத்துடன் சேலம் வந்திருக்கிறது. 


சேலத்தை அடுத்த அரியானூரில் வைத்து போலி நிதி நிறுவன கும்பல், அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாயை பெற்றுள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள், சிறிது நேரத்தில் உங்கள் வங்கி கணக்கிற்கு 2 கோடி ரூபாய் பணம் வந்து விடும் என்று சொல்லிவிட்டு காரில் விருட்டென்று பறந்துள்ளனர். ஆனால் சில மணி நேரங்கள் ஆன பிறகும் தங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர். 


அதன்பிறகே, பரணி உள்ளிட்ட நான்கு பேரும் அரியானூரில் உள்ள தனியார் கல்லூரியில் கல்விக்கட்டணம் செலுத்த வந்தபோது, மர்ம நபர்கள் பணத்தைப் பறித்துக் கொண்டதாக காவல்துறையில் சரடு விட்டுள்ளனர். பணம் பறித்த கும்பலின் செல்போன் எண், நிகழ்விடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


பத்திரிகையில் வெறும் ஆயிரம் ரூபாய் செலவில் வரி விளம்பரம் கொடுத்து, மர்ம கும்பல் நூதன முறையில் 6 லட்சம் ரூபாயை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்