![s](http://image.nakkheeran.in/cdn/farfuture/UT23OFJF6FoKACdvJQD_1sgvJJX00cHcAv2Zst-xCiM/1548319514/sites/default/files/inline-images/sathanur-dam.jpg)
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையின் முழு நீர் மட்டம் 119.00 அடி, சாத்தனூர் நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு 7321 மி.க. அடி, 23.1.2019 காலை 8.00 மணி அளவில் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 96.20 அடி, சாத்தனூர் நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு 3222 மி.க. அடி ஆகவும் உள்ளது.
ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கைகள் விடுத்தனர். அதன் அடிப்படையில், விவசாய மக்களின் வேண்டுகோளினை ஏற்று, சாத்தனூர் அணையிலிருந்து 7543 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இடது மற்றும் வலது புறக் கால்வாய்களில் முறையே விநாடிக்கு 150 கன அடி மற்றும் விநாடிக்கு 200 கன அடி வீதம் 23.1.2019 முதல் 3.3.2019 வரையிலான 40 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீரை வழங்குவதற்கும், திருக்கோவிலூர் அணைக்கட்டு பழைய ஆயக்கட்டு 2500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் போக சாகுபடிக்கு 600 மி.க. அடி நீரினை நீர் பங்கீடு விதியின்படி பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதத்திற்குள், தேவைக்கேற்ப, மூன்று தவணைகளில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அணைக்கட்டில் இடது மற்றும் வலது புறகால்வாய்களில் இன்று 23.1.2019 முதல் 30.3.2019 வரை 40 நாட்களுக்கு ஏரிகளுக்கு மட்டும் தொடர்ந்து பாசனத்திற்காக இடது புறுக்கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி மற்றும் வலது புறக்கால்வாயில் விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் என மொத்தம் 350 கன அடி வீதம் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
அதன்படி இன்று ஜனவரி 23ந-ம் தேதி காலை பாசனத்துக்காக தண்ணீர் திறக்க மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சாத்தனூர் அணைக்கு சென்றார். இதுப்பற்றிய தகவல் ஆளும்கட்சியான அதிமுகவை சேர்ந்த திருவண்ணாமலை தொகுதி எம்.பி வனரோஜா உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் கலந்துக்கொள்ளவில்லையென்றதும் அதிமுகவினர் அனைவரும் புறக்கணித்தனர். செங்கம் தொகுதிக்குள் சாத்தனூர் அணை வருவதால் அத்தொகுதி எம்.எல்.ஏவான திமுகவை சேர்ந்த கிரி மற்றும் விவசாய சங்க அமைப்பினர் கலந்துக்கொண்டு அணையில் இருந்து நீரை திறந்துவிட்டனர்.
சாத்தனூர் அணையில் தற்போது 3222 மி.க. அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அடிப்படைத்தேவை குடிநீர் திட்டங்களுக்கு வழங்க வேண்டி நீர் அளவு, மண் தூர்வினால் ஏற்பட்டுள்ள கொள்ளளவு இழப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பும் சேர்ந்து 1451.86 மி.க. அடி தண்ணீர் தேவை. ஆகவே அணையின் மீதம் உள்ள பாசனம் நீர் இருப்பு 1170.15 மி.க. அடியாகும். பாசன நீரை சிக்கனமாகவும் துறை பணியாளர்களின் அறிவுரைப்படியும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு பாசன ஆயக்கட்டுதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அறிவிக்கட்ட தேதிக்கு மேலும் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதியை நீட்டிக்கப்படமாட்டாது என கூறப்படுகிறது.
சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர், திறக்கப்பட்டுள்ளதால், சாத்தனூர் இடதுபுறக் கால்வாய் பாசனம் மூலம் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், எடத்தனூர், அகரம்பள்ளிப்பட்டு, அல்லப்பனூர், தென்கரிம்பலூர், கொட்டையூர், குங்கிலிநத்தம், சதாக்குப்பம், வாணாபுரம், மழுவும்பட்டு, சேர்ப்பாப்பட்டு ஆகிய கிராமங்களும், திருவண்ணாமலை வட்டம், அத்திப்பாடி, கண்டியாங்குப்பம், பழையனூர், வேளையாம்பாக்கம், கல்லொட்டு, நவம்பட்டு, சக்கரத்தான்மடை, நரியப்பட்டு, தலையாம்பள்ளம், தச்சம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, பரையம்பட்டு, பாவுப்பட்டு, காட்டாம்பூண்டி, பெரியகல்லப்பாடி, அரடாப்பட்டு, கொளக்குடி, நடுப்பட்டு, ஆண்டாப்பட்டு, பவித்திரம் ஆகிய கிராமங்களும், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், மேலந்தல், ஜம்பை, பள்ளிச்சந்தை, செல்லாங்குப்பம், மணலூர்பேட்டை, அத்தியந்தல், தேவரடியார்குப்பம், கொங்கனாமூர், முருக்கம்பாடி, சித்தப்பட்டிணம் ஆகிய கிராமங்கள் பயன்பெறுகிறது. மேலும், சாத்தனூர் வலதுபுறக் கால்வாய் பாசனம் மூலம் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ராயண்டபுரம், விஜயப்பனூர், தொண்டாமனூர், இளையாங்கன்னி, பெருங்களத்தூர், ஆகிய கிராமங்களும், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு, புரவலூர், பரசப்பட்டு, இருடியாம்பட்டு, மேல்சிறுவள்ளுர், ஒலகலப்பாடி, வடக்கேரனூர், பிரம்மகுடம், வடபொன்பரப்பை, மங்களுர், அருளம்பாடி, அர்காவாடி, வடமாமண்டூர், அத்தனூர், அரும்பரம்பட்டு, சீர்ப்பாநந்தல், சீர்ப்பாதநல்லூர், எடத்தனூர், ஐம்போடை, திருவாங்கனூர், கல்லிப்பாடி, மரியாந்தை, பாக்கம், மூக்கனூர், கடுவானூர், அத்தியூர், தொழுவந்தாங்கல், பெரியகொல்லியூர், சின்னகொல்லியூர், அரியலூர், வாணாபுரம், சிவப்பூர், பண்டாளம், எஸ்.கொளத்தூர், வரகூர், அரூர், திம்மநந்தல், கிடன்குடியான்பட்டு, செல்லகாயக்குப்பம், விரியூர், அரசம்பட்டு, வடசிறுவள்ளுர் ஆகிய கிராமங்கள் பயன்பெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.