Skip to main content

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஓய்வூதியம்; முதல்வருக்கு நன்றி தெரிவித்த பத்திரிகையாளர் சங்கம்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

jkl


"தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்" மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் டி.இளையராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில் கூறியிருப்பதாவது, " தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (31.10.2022) தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கிய நிகழ்வு பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.

 

"தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்" சார்பாக முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பத்திரிகையாளர்களின் பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். மேலும், 2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவோம் என அறிவித்தார். அதன்படியே செயலாற்றியும் வருகிறார்.

 

பத்திரிகையாளர்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட  தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு,  அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வுபெற்ற பின்னர், எத்தகு இயலாமைக்கும் ஆளாகாமல் இருக்க அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.  2022-23ஆம் ஆண்டிற்கான செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கையில், பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு 3 இலட்சம் ரூபாயிலிருந்து 4 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

 

அதன்படி நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு இன்று ஆணைகளை வழங்கியுள்ளார்.

 

அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பாகவும் மற்றும் நமது "தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்" சார்பாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மேலும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் ம.சு. சண்முகம் இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் இ.ஆ.ப., செய்தித் துறை துணை இயக்குநர் மேக வண்ணன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என தமது நன்றி அறிக்கையில் கூறியுள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்