திருச்சி மேலப்புதூர் ட்ரெங்க்பார் பகுதியைச் சேர்ந்தவர் காரல் கஸ்பரோ பிரவீன். இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டெரி சிந்தியா பிரிசில் (30). இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பகுதி நேர வேலை என்ற ஒரு பக்கம் வந்தது.
பின்னர் அதன் மூலமாக மர்ம நபர் கொடுத்த ஆலோசனையின் பேரில் தனது பெயரைப் பதிவு செய்து அந்த மோசடி நபர் கூறிய நிறுவனத்தில் ரூபாய் 20,252 முதலீடு செய்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கி கணக்குக்கு ரூபாய் 25 ஆயிரத்து 48 வந்து சேர்ந்தது. இதைத்தொடர்ந்து கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கருதிய அவர் பல்வேறு தவணைகள் மூலமாக ரூபாய் 6 லட்சத்து 56 ஆயிரத்து 467 முதலீடு செய்தார். அதன் பின்னர் பல நாட்கள் கடந்தும் அவருக்கு லாபத் தொகை வரவில்லை.
இதனைத் தொடர்ந்து, அந்த நபரைத் தொடர்பு கொள்ள முயன்ற போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட சிந்தியா திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்கு பதிவு செய்து பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியிடம் மோசடி செய்த அந்த மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகிறார்.