சேலம் அருகே, பெண் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி ரகுவின் கூட்டாளிகள் மூன்று பேரை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (42). இவருடைய கணவர் ரகு. மேட்டூரைச் சேர்ந்த ரகு மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் லட்சுமி, கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி வீட்டில் தலைமுடி அறுக்கப்பட்டும், உடல் முழுக்க கத்திக்குத்து காயங்களுடனும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.
லட்சுமி முதலில் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்தார். அவர் திடீரென்று இறந்துவிட்டார். அதையடுத்து மேட்டூர் ரவுடி ரகுவுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமத்துவபுரத்தில் ஒரு இளைஞருடன் லட்சுமி நெருங்கிப் பழகியதாகவும், அதை ரகு கண்டித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தின் மூலம் லட்சுமி பெயரில் ரகு பல்வேறு சொத்துகளை வாங்கியதாகவும், அந்த சொத்துகளை மீண்டும் தன் பெயருக்கு மாற்றி எழுதித் தரக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அவரை ரகு கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அதன்பேரில் ரகு, அவருடைய கூட்டாளிகள் ஷேக் மைதீன் (29), ஜோசப் என்கிற பாலாஜி (19), ஆனந்த் (28) ஆகியோரை ஆட்டையாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் தேடி வந்தனர். இதற்கிடையே, கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் ரகு சரணடைந்தார். அவரை காவல்துறையினர் கடந்த ஜூன் 26ம் தேதி காவலில் எடுத்து விசாரித்தனர். அவரைத் தொடர்ந்து பவானி நீதிமன்றத்தில் ரகுவின் கூட்டாளிகள் மூவரும் சரணடைந்தனர். இதையடுத்து கூட்டாளிகள் ஷேக் மைதீன், ஜோசப் என்கிற பாலாஜி, ஆனந்த் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சேலம் நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், மூன்று பேரையும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி ரகுவின் கூட்டாளிகளை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.