திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட மின்னூர் மற்றும் சின்னப்பள்ளிகுப்பம் பகுதியில் வசித்து வந்த இலங்கைத் தமிழர் மக்களுக்கு அரசு ரூ.12.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மின்னூர் பகுதியில் 236 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ வேலு, சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் குடியிருப்பு பகுதிகளை விழா நடத்தித் திறந்து வைத்தனர்.
குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதற்கு முன் அமைச்சர்கள் ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் ஆய்வு மேற்கொண்ட நிலையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட இலங்கைத் தமிழர் வாழ் குடியிருப்புகள் திறந்து வைத்து 15 நாட்களுக்கு பிறகு 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு கட்டிக் கொடுக்கப்பட்ட புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று(17.09.2024) காந்தன் விஜயா தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் புதிய வீட்டிற்கு வந்த முதல் நாளிலேயே வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்ததால் அச்சமடைந்து குழந்தைகளுடன் வெளியில் வந்துள்ளார். மேலும் அதே குடியிருப்புகளில் உள்ள கண்ணக்கா உள்ளிட்ட பலரின் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு சிலர் சீரமைப்பு செய்து கொண்டதாகவும் ,வசதி இல்லாதவர்கள் விரிசல் ஏற்பட்டுள்ள வீட்டிலேயே ஆபத்தான முறையில் வாழ்ந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்த வீட்டின் உரிமையாளர் காந்தன், “அரசு இலங்கை தமிழர் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதாக ரூ.12. 42 கோடி நிதி ஒதுக்கிக் கட்டிடப் பணிகள் நடைபெற்று வரும் போது அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் என அனைவரும் ஆய்வு மேற்கொண்டும் தரமற்ற முறையில் வீடுகள் கட்டியுள்ளதாகவும் தங்களை இந்த அரசு வாழவைப்பதற்காகக் கட்டிக் கொடுத்ததா..? அல்லது சாவதற்குக் கட்டிக் கொடுத்ததா?” என வேதனை தெரிவிக்கும் அவர், கவனக்குறைவால் குழந்தைகள் உள்ளே இருக்கும் போது விழுந்திருந்தால் தங்கள் குழந்தைகளின் நிலைமை என்னாகியிருக்கும்..? என கேள்வி எழுப்பினார். மேலும் வெளியில் உள்ள கால்வாய் மற்றும் கழிவறைக்கான பைப் லைனை மாற்றி மாற்றி அமைத்துள்ளனர் எனக் குற்றம் சாட்டினார்.