திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன். விவசாயியான இவர், வீட்டுச் செலவுக்காக தன்னுடைய மனைவியின் நகைகளை வாணியம்பாடியில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வைத்து அந்த பணத்தை தன் இரு சக்கர வாகன சீட்டுக்கு அடியில் வைத்துக் கொண்டு அங்கிருந்து நியு டவுன் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
தனியார் மருத்துவமனைக்கு வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் உறவினரை பார்க்க உள்ளே சென்ற பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் சீட் திறந்த நிலையில் இருந்தது உள்ளே பார்த்த போது பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை பார்த்த போது இரண்டு பேர் இவரை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்து பணம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதன் பின்னர் மோகன், சி.சி.டி.வி காட்சிகளை வைத்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரின் பேரில், போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தற்போது அந்த சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி நகர பகுதியில் கடந்த 3 மாதங்களாக உழவர் சந்தை, தனியார் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள், சைக்கிள்கள் கொள்ளை போவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில், பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் பகிரங்கமாக இரு சக்கர வாகனத்தில் சீட்டை திறந்து பணம் எடுத்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.