சி.பி.ஐ.யில் டி.ஐ.ஜியாக இருப்பவர் சோனல் சந்திரா. இவருக்குத் தாம்பரம் காவல் ஆணையரகம், கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோமான் நகர், ஐஜி தோட்டம் பகுதியில் வீடு மற்றும் தோட்டம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (11.08.22) காலை சுமார் 10.30 மணி அளவில் சோனல் சந்திரா வீட்டைப் பராமரிக்கும் மதன் என்பவர் வீட்டிற்கு வந்து பராமரிப்பு வேலையைச் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்த மதன் ஓடிப்போய் பார்த்திருக்கிறார். அப்பொழுது வீட்டின் மாடியிலிருந்து யாரோ ஒரு மர்ம நபர் குதித்து ஓடியுள்ளார். அதனைத் தொடர்ந்து மதன், ராஜசேகர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு, வீட்டினில் இருந்த பொருட்கள் திருடப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது.
அதனைக் கண்ட மதன், சோனல் சந்திராவின் கணவர் ராஜசேகருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் ராஜசேகர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவந்தனர்.
மேலும், வீட்டில் திருட வந்த பொழுது விட்டுச்சென்ற மூன்று சக்கர வண்டியை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கேளம்பாக்கம் பகுதியில், செங்கண்மால் அருகே தர்மா என்பவர் நடத்திவரும் பழைய பொருள் விற்பனை கடையில் வேலை செய்துவரும் அப்துல் ரசாக்(21) என்பவர்தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அப்துல் ரசாக் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அப்துல் ரசாக், கடந்த எட்டு வருடங்களாகப் பெங்களூரில் வாழ்ந்து வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர். இவர், கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் செங்கண்மாலுக்கு வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.