
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அனைத்து துறைகளிலும் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள ஒரே பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் பீங்கான் தொழில் நுட்ப கல்லூரி விருத்தாசலத்தில் உள்ளது.
மேலும் கேரளா மற்றும் தென் மாவட்டங்களை சென்னையோடு இணைக்கும் முக்கிய ரயில்வே நிலைய சந்திப்பு, நான்கு தாலுக்கா விவசாயிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் பெரிய அளவிலான ஒழுங்கு முறை விற்பனை கூடம், முந்திரி, வேர்க்கடலைகளுக்கான வேளாண் ஆராய்ச்சி நிலையம், மின் துறை, கல்வி துறை என மாவட்ட அளவிலான பல்வேறு துறை அலுவலகங்கள் என அனைத்தும் உள்ளதாலும், மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளான வேப்பூர், சிறுபாக்கம், மங்களூர், தொழுதூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பேட்டை போன்ற பகுதிகளிலிருந்து மாவட்ட தலைநகரான கடலூர் செல்ல அதிக நேரம் கடக்க வேண்டியுள்ளதாலும் இப்பகுதிகளின் மையப்பகுதியாக உள்ள விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களை ஐந்தாக பிரித்து விருத்தாசலத்தை மைய இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்பினர், விவசாய சங்கத்தினர் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் விருத்தகீரிஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, திருமுட்டம், திட்டக்குடி, தொழுதூர், வேப்பூர், மங்களூர் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து விருத்தாசலம் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 22.01.2019 செவ்வாய்கிழமை காலை விருத்தாசலம் பாலக்கரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும் விருத்தாசலம் மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி அரசு அதிகாரிகள், அமைச்சர்களிடம் மனு கொடுப்பது, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கையெழுத்து இயக்கம் நடத்துதல், ஜனவ்ரி 26 அன்று கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் இயற்றுதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதேபோல் விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட எந்த பகுதிகளையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க கூடாது எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. விருத்தாசலம் மாவட்டமாக அறிவிக்கும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.