யுடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸ் அதிகாரிகளை தவறாக பேசியது மற்றும் கஞ்சா பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது. ஏற்கனவே அவர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாகவும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தார். குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை ஆய்வு செய்வதற்கான அரசின் குழுவானது மிக முக்கியமான பரிந்துரை வழங்கியது. அதில் குண்டர் சட்டத்தை இவர் மீது பயன்படுத்தி இருக்க வேண்டாம் என்று பரிந்துரை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த பரிந்துரையை ஏற்று நீதிமன்றத்தில் தகவலாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். அதே நேரம் கைது செய்யப்பட்டுள்ள தனக்கு பிணை வேண்டும் என சங்கர் கோரிக்கை வைத்த நிலையில் அவர் மீது ஏற்கனவே 24 க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது என தமிழ்நாடு அரசு சார்பில் சொல்லப்பட்டிருந்தது. எனவே அந்த வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால் தவிர மற்ற விஷயங்களில் அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.