காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூருக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. இந்த நிலையில் உபரி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது. அந்தத் தண்ணீர் கல்லணைக்கு வந்து, பின்பு கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 786 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீர் கீழ் அணையை வந்து அடைந்துள்ளது. ஒன்பது அடி தண்ணீரை மட்டுமே கீழ் அணையில் தேக்க முடியும் என்பதால் கீழ் அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 1லட்சத்து 33 ஆயிரத்து 82 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் வினாடிக்கு 2 ஆயிரத்து 704 கன அடி தண்ணீர் கீழ் அணையில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்கால், குமிக்கி மண்ணியாறு ஆகியவற்றில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்றைய நிலவரப்படி மேட்டூரில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் கீழ் அணைக்கு வரும் தண்ணீரில் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாகத் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கீழணை மற்றும் கொள்ளிடம் ஆற்றின் இடது கரை பகுதியில் சிதம்பரம் நீர்வளத்துறைச் செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் அணைக்கரை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் மற்றும் உதவிப் பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கீழ் அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரால் இடது மற்றும் வலது கரையோர கிராமங்களில் நீர்மட்டம் உயரும். மேலும் இந்தத் தண்ணீர் கடலில் சென்று சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.