Skip to main content

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 12/01/2018 | Edited on 12/01/2018
ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆசிரியர் நியமனத்தில் தகுதி காண் மதிப்பெண் முறைக்குப் பதிலாக, தகுதித் தேர்வு முறையை நடைமுறைப்படுத்தி சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் இப்போதுள்ள தகுதிகாண் மதிப்பெண் முறையே தொடரும் என்றும், இந்த முறை ரத்து செய்யப்படாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் நியமனத்தில் பறிக்கப்பட்ட சமூகநீதி மீண்டும் நிலை நிறுத்தப்படும்  என எதிர்பார்த்துக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு இம்முடிவு ஏமாற்றமளித்துள்ளது.

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறை இயற்கை நீதிக்கும், சமூக நீதிக்கும் எதிராக அமைந்திருப்பதால் அதை நீக்க வேண்டும் என்று கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வருகிறது. இந்த முறையை மாணவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இக்கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்வது குறித்து தமது தலைமையிலான பள்ளிக்கல்வித் துறையின் உயர்நிலைக்குழு நவம்பர் மாதம் கூடி முடிவெடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். ஆனால்,  இரு மாத இழுபறிக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று நடந்த உயர்நிலைக்குழுக் கூட்டத்தில், ஆண்டுக்கு இரு முறை தகுதித் தேர்வை நடத்துவது என்றும், தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்யாமல் தொடர்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்துவது வரவேற்கப்பட வேண்டியதா£கும். ஆனால், ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை கடைபிடிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றாகும். ஏனெனில்  தகுதி காண் மதிப்பெண் முறை என்பது இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை பழிவாங்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற அனைத்து பிரிவு மாணவர்களும் 60% மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இது கடினமான இலக்காக இருந்ததாலும், மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாலும் தமிழகத்திலும் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தேர்ச்சி மதிப்பெண்ணை 55% ஆக குறைத்த தமிழக அரசு, நியமன முறையில் மாற்றங்களை செய்தது.

அதுவரை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நியமிப்பது தான் நடைமுறையாக இருந்தது. ஆனால், தகுதிகாண்(Weightage) மதிப்பெண் என்ற புதிய முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. அதன்படி தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 60% மட்டும் எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பட்டப்படிப்பு, ஆசிரியர் கல்விப் படிப்பு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களில் தலா 15%, 12 ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களில் 10% சேர்த்து தரவரிசை தயாரிக்கப்படும் என்றும் அந்த வரிசைப்படி தான் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் அரசு அறிவித்தது. இது அனைவருக்கும் சமநீதி என்ற இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

தகுதித் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண் என்பது அனைவருக்கும் ஒரேமாதிரியானதாகும். ஆனால், தகுதிகாண் மதிப்பெண் அப்படிப்பட்டதில்லை. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளில் மதிப்பீடு செய்யும் முறை கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவில் மாற்றம் கண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் 80% மதிப்பெண்கள் எடுப்பதே சாதனையாக இருந்தது. ஆனால், இப்போது 100% மதிப்பெண் எடுப்பதென்பது சர்வசாதாரணமாக மாறி விட்டது. இதனால் கடைசியாக நடந்த ஆசிரியர் நியமனத்தின் போது தகுதித் தேர்வில் 150க்கு 85 மதிப்பெண் எடுத்த பலருக்கு அவர்கள் 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்ததால் எளிதாக வேலை கிடைத்து விட்டது. அதேநேரத்தில் தகுதித் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்த பலருக்கு, பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் குறைவாக இருப்பதால் ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகளில் பெரும்பான்மையானோர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் ஆவர். இதேநிலை நீடித்தால் இவர்களுக்கு ஆசிரியர் பணி பகல்கனவாகவே இருக்கும்.

20 ஆண்டுகளுக்கு முன் 12-ஆம் வகுப்புத் தேர்வில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களையும், கடந்த ஆண்டில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களையும் ஒரே மாதிரியாக கணக்கிடுவதை விட கேலிக்கூத்து எதுவும் இருக்கமுடியாது. இது சமூகநீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் ஆகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய முறை கடைபிடிக்கப்படுவதில்லை. எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு, தகுதித் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்து சமூக நீதியை நிலைநிறுத்த தமிழக ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்