Skip to main content

“அண்டம் கிடுகிடுங்க என்னமோ நடக்க போது; நடத்தி காட்டபோறோம்” - ராமதாஸ் எச்சரிக்கை 

Published on 26/07/2024 | Edited on 26/07/2024
Ramdoss warned we will conduct it in such a way that country will look back

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்து கோனேரிகுப்பத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாமக கவுரவ தலைவை ஜி.கே மணி தலைமையில் ராமதாஸின் பிறந்தநாளை நாள் விழா, மரக்கன்று நடும் விழா, பாவரங்கம் என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பாமக நிர்வாகி பலரும் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் பேசிய ராமதாஸ், “கேரளாவில் ஈழவர்கள் என்ற சாதி இருந்தது. 20 அடி துரத்தில் அவர்களைப் பார்த்தால் முன்னேறிய சாதிக்காரர்கள் உடனே சென்று குளித்துவிடுவார்கள். கேரளாவில் ஈழவர்கள் சாதியினர் மேலாடை அணியக்கூடாது, பெண்கள் மேல்சீலை போடக்கூடாது. அப்போது நாராயண குரு என்பவர் தோன்றி அந்த மக்களுக்குக் கல்வியைக் கொடுத்தார். 

ஒரு நாள் வன்னியருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது தொடர்பாக அப்போதைய ஜனாதிபதி வெங்கட் ராமனைச் சந்தித்து மனு கொடுத்தோம். அப்போது அவர், ‘எங்கள் சாதிக்காரர்கள் உத்தரப்பிரதேசத்தில் குதிரை வண்டி ஓட்டுகிறார்கள்; சமையல்காரர்களாக இருக்கிறார்கள்” என்று  எங்களிடம் கூறினார். 

அத்தோடு இல்லாமல் மத்திய அரசின் உயர் பதவியில் ஈழவர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் ஈழவர்கள் உயர்பதவி வகிக்கின்றனர். அவர்கள் படித்து முன்னேறி இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துவிட்டார்கள் என்று வேறு சாதியைப் பார்த்துப் பொறாமைப்பட்டுக்  கூறினார். அப்படிப்பட்ட சாதியில் இருந்து கேரளாவிற்கு 4 முதல்வர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் இங்கே, நல்லா குடிங்க; குறைவில்லாமல் உற்பத்தி செய்கிறோம் என்று குடிக்க வைக்கிறார்கள். அவர்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்று நான் தவிக்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலினை கோட்டையில் சந்தித்து 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக 35 நிமிடம் வகுப்பெடுத்தேன். அப்போது, இந்த ஊமை ஜனங்களுக்கு உங்களை விட்டால் யார் செய்யவாங்க? என்றேன்.

ஆனால் இந்த ஊமை ஜனங்க இன்னும் இரண்டு மாதத்தில் பேசப்போகிறார்கள். எப்படிப் பேசுவார்கள் என்று நாடே கிடுகிடுக்க, நாடே ஸ்தம்பிக்க, ஊமை ஜனங்களுக்கு இவ்வளவு தைரியம் துணிச்சல் எங்கிருந்து வந்தது என்று மற்றவர்கள் பேச, ஆட்சியில் இருப்பவர்களுடைய குடை சாயா இந்த ஊமை ஜனங்கள் பேசப்போகிறார்கள்” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “உங்களிடம் நாங்கள் வந்து  10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்க வேண்டுமா? எனக்கு அவமானமாக இருக்கிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டால் நீங்கள் மத்திய அரசை கை காட்டுகிறீர்கள். அப்புறம் எதற்கு நீங்கள் இங்கே முதலமைச்சராக இருக்கிறீர்கள். ஆகா என்னமோ நடக்கப் போகிறது; நடத்தி காட்டபோறோம். அண்டம் கிடுகிடுவென்று நடுங்கப் போகிறது” என்று எச்சரித்தார். 

சார்ந்த செய்திகள்