கடந்த வாரத்தில் மஞ்சகரிச்சான் கண்மாய் பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்த நிலையில், விசாரணையின் போது வெறும் ஒன்றரை பவுன் தங்கத்திற்காகவே அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவர ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாழையில் கடந்த ஜூலை 14ம் தேதி மஞ்சகரிச்சான் கண்மாய்க்குள் வாலிபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்ததை தொண்டி காவல் நிலையத்தார் பிணத்தை கைப்பற்றி பிணக்கூராய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்துகொலை செய்தவர்களை தேடி வந்தனர்.
விசாரணையில் கொலையுண்ட நபர் முகிழ்தகம், முத்தமிழ்நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் அஜீத்குமார் என்பது தெரிய வந்தது. இவ்வேளையில், அஜீத்குமார் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் உடலை வாங்காமால் போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், தொண்டி பகுதியைச் சேர்ந்த நைனாமுகம்மதும், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராஜகுருவும் சந்தேகத்தின் பேரில் போலீசாரிடம் சிக்க விசாரணையில் அவர்கள் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
கொலையாளிகளோ," கடந்த 13ம் தேதி இரவில் கொலையுண்ட அஜித்குமாருடன் தாங்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அஜித்குமார் கழுத்தில் 1 ½ பவுன் தங்க செயினுக்கு ஆசைப்பட்டு கூடுதலாக மது ஊற்றி கொடுத்து போதையில் இருந்த போது அஜித்குமாரை தலையில் அடித்து கழுத்தை அறுத்து வீசிவிட்டு கழுத்தில் கிடந்த தங்க செயினையும், 3ஆயிரத்து 500 ரூபாயை எடுத்துக் கொண்டு இரண்டு சக்கர வாகனத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி சென்றதாகவும்" என வாக்குமூலம் வெளியாகியுள்ளது. ஒன்றரை பவுன் தங்கத்திற்காகவே இளைஞர் கொலை செய்யப்பட்டதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.