“பிரபலங்களின் சாமி தரிசனமும் இங்கே அரசியலாகப் பார்க்கப்படுகிறது” என்றார் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரஜினி ரசிகரான ஸ்ரீராம்.
விஷயம் இதுதான் –

தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் சினிமா படப்பிடிப்பு குற்றாலம் பகுதியில் நடந்து வருகிறது. அங்கிருந்த தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவும், சினேகாவின் கணவர் பிரசன்னாவும், ‘ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளைத் தரிசிக்க வேண்டும்’ என்று அடிக்கடி சொன்னதால், அவ்விருவரையும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைத்திருக்கிறார் தனுஷ். அவர்கள் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வந்தபோது, அமரராகிவிட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் தங்கமாங்கனியும் உடன் இருந்தார். ஐஸ்வர்யா கோவிலுக்கு வந்ததை உள்ளூர் ரஜினி மக்கள் மன்றத்தினர் அறிந்திருக்கவில்லை. ஆனால், இந்த வழிபாடு அரசியலாகப் பேசப்படுகிறது.

ரஜினியின் அரசியல் வெற்றிக்காகவே ஐஸ்வர்யா ஆண்டாளைத் தரிசிக்க வந்தார் என்கிறார்கள். ஏனென்றால், அரசியலில் கால் பதித்தவர்களெல்லாம், அரசியல் வெற்றிக்கான வேண்டுதலோடு, இங்கு வந்து சென்றதுண்டு.

திமுக பிரமுகர் தங்கமாங்கனியிடம் பேசினோம். “குற்றாலம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த என் நண்பர் சொல்லி, தனுஷ் உதவியாளர் சிங்கம் என்னிடம் பேசினார். அதனால், கோவிலுக்கு வரும்போது அவர்களுடன் சென்றேன். மூன்று நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் போக வேண்டும் என்று மாறிமாறி சொல்லியிருக்கின்றனர். அதனால்தான், தனுஷ் அனுப்பி வைத்திருக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் தரிசனம் முடித்துவிட்டு, சங்கரன்கோவில் சென்று சங்கரநயினார் – கோமதியம்மாளைத் தரிசிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். நேரமாகிவிட்டதால் செல்ல முடியவில்லை. இது வழக்கமான வழிபாடுதான். எனக்குத் தெரிந்து, அரசியல் வேண்டுதலெல்லாம் எதுவும் இல்லை.” என்றார்.

ஐஸ்வர்யாவும், பிரசன்னாவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்தது, மணவாள மாமுனிகள் சன்னதிக்குச் சென்றது, சடகோப ராமானுஜ ஜீயரைச் சந்தித்தது என, ஆன்மிக பரவசத்தில் திளைத்திருக்கின்றனர்.