கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சில இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளதால் ஏழை மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் சிறு மழையைக்கூடத் தாக்குப் பிடிக்கமுடியாமல் கழிவு நீர் சாக்கடைகள் குடியிருப்பு பகுதிக்கு வருவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு வில்வ நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதியில் பெரும்பான்மையாகத் தினக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு பாதாளச் சாக்கடை திட்டம் மற்றும் அதன் பிறகு மின் புதை வடிகால் திட்டத்திற்குத் தோண்டப்பட்ட பள்ளத்தால் இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிமெண்ட் சாலை சேதமானது. அதன் பிறகு சாலையைப் போட மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர். அதோடு, மழைக்காலங்களில் சேரும், சகதியுமாக உள்ள சாலையைப் பொதுமக்கள் சகித்துக்கொண்டு பயன்படுத்துகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கழிவு நீர் செல்லும் வாய்க்கால்களில் கழிவு நீர் சாக்கடை தேங்கியுள்ளது.
இதனால் அப்பகுதியில் பெய்யும் சிறு மழையைக்கூடத் தாக்குப் பிடிக்காமல் கழிவு நீர் சாக்கடைகள் குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுவதாகவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சனிக்கிழமை இரவு பெய்த சிறு மழை நேரத்திலும் சாக்கடை கழிவுகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிட்டது என்றும் கூறுகிறார்கள். மேலும் இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். இப்பகுதியில் உள்ள 4வது வார்டு மாநகராட்சி உறுப்பினர் சரிதாவிடம் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அவர் இதனைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அதே சமயம் சரிதா வசிக்கும் பகுதியில் மட்டும் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்தப் பகுதியில் தினந்தோறும் குப்பைகளை அகற்றி வருவதாகவும் ஆனால் மற்ற இடங்களில் சாக்கடை கழிவுகள், குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் தொடர் குற்றச்சாட்டாக உள்ளது. வடகிழக்கு பருவ மழையையொட்டி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களைத் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனவே மாநகராட்சி நிர்வாகம் வில்வ நகரில் சாக்கடை கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் மழை பெய்யும் போது கழிவு நீர் வாய்க்காலில் சாக்கடைகள் தேங்கி உள்ளதால் மழை நீருடன் சாக்கடை கழிவுகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் அவல நிலை ஏற்படும்.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட மர்ம நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு ஐ.ஏ.எஸ்.யிடம் கேட்டபோது, “நான் இந்த மாநகராட்சியில் பொறுப்பேற்றபோது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே போன்று புகார் வந்தது. அப்போது 15 நாட்கள் அப்பகுதியில் மாநகராட்சி ஊழியர்களைக் கொண்டு சாக்கடை அடைப்புகளைச் சரி செய்தோம். கழிவுகள் செல்லும் வாய்க்காலை ஆக்கிரமித்து 2 நபர்கள் வீடு கட்டியுள்ளனர். இதனை இடிக்கச் சென்ற போது பிரச்சனை ஏற்பட்டு சமரசம் ஆகிவிட்டார்கள். தற்போது மீண்டும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்படும். மேலும் கழிவுகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.