Skip to main content

போலிசை கொண்டு பொதுமக்கள் வெளியேற்றம்; கரையோரமக்கள் அவதி

Published on 18/08/2018 | Edited on 27/08/2018

 

 

நாகை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கறையோர பகுதிகளான முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், வாடி, நடுதிட்டு, அளக்குடி, காட்டூர் உள்ளிட்ட  கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.  பொது மக்களை கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

 

அந்த கிராமங்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டார் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், "தண்ணீர் சூழ்ந்துள்ள கிராமங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றி, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமங்களை விட்டு வெளியேற மறுப்பவர்களை காவல்துறை மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சனிக்கிழமை சுமார் 3.50 லட்சம் கனஅடிவரை கொள்ளிடத்தில் தண்ணீர் வரக்கூடும் என்பதை கிராம மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறும்போது, சிலர் கிராமத்தை விட்டு வெளியேற சம்மதித்துள்ளனர். 

 

 

 

சீர்காழி தாலுகா பகுதியில் சில கிராமங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் வந்து சேரவில்லை. இதற்கு காரணம், அணைக்கரையிலிருந்து மேற்கண்ட கிராமங்களுக்கு 63 கி.மீ. தூரத்துக்கு ஒரே வாய்க்காலில் தண்ணீர் வந்து சேரவேண்டியுள்ளது. 

 

இந்த வாய்க்காலில் தலைப்பில்  உள்ள கிராம மக்கள் தண்ணீரை தேக்கி வைத்துக்கொண்டு, தர மறுப்பதால் தண்ணீர் வந்து சேரவில்லை. இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

 

அங்குள்ள பொதுமக்கள் கூறுகையில், "எந்த விதமான" முன்னறிவிப்பும் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறி போகசொல்லுறாங்க, நாங்க போகிறோம் சரி, எங்களோடு வாழ்ந்துவரும் ஆடு,மாடு,கோழி, குஞ்சுகளை என்ன செய்வது. தண்ணீர் கொள்ளிடத்தில் அதிகமாக திறக்கப்போகிறோம்னு முன்கூட்டியே கூறியிருந்தால் எங்காவது போயிருப்போம், இப்போ வீடுகளை தண்ணீர் சூழ்ந்துடுச்சி, சாப்பாட்டுக்கும் வழியற்றவர்களாக இருக்கிறோம், அரசும், அதிகாரிகளும் செய்த தவறாலும், அவர்களின் அலட்சியத்தாலும் நாங்க தவிக்கிறோம் தண்ணீர் இல்லாம ஆறாண்டா தவிச்சோம், இப்போது தண்ணீரால தவிக்கிறோம்." என கலங்குகின்றனர்

சார்ந்த செய்திகள்