Skip to main content

“மாணவர்களின் முன்னேற்றமே தமிழ்நாட்டின் முன்னேற்றம்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
Progress of students is the progress of Tamil Nadu says  Minister I. Periyasamy

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தற்காலிகமாக வகுப்புகள் நடைபெற்று வரும் வக்கம்பட்டி ஜெயின் கல்லூரியில்) முதலாம் ஆண்டு வகுப்பினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார்.

நிகழ்வில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதோடு, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். 

குழந்தைகள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவிகளின் கல்வி பொருளாதார காரணங்களால் தடைபடக்கூடாது என்பதற்காக புதுமைப் பெண் திட்டத்தினை ஏற்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தினை ஏற்படுத்தி மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் 6 கல்லுாரிகள் தொடங்கப்பட்டுள்ளது.. மேலும், நத்தத்தில் ஒரு கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் சிறப்பாக படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த கல்லூரிகளில் ஏற்படுத்தப்படும். இப்பகுதியில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் உயர் கல்வி பயில வேண்டும். கல்லூரியில் ஆசிரியர்கள் கண்டிக்கும்போது அதை மாணவர்கள் மனப்பூர்வமாக ஏற்று மதிப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும்.  மாணவர்கள் தங்கள் கடைசி மூச்சு இருக்கும் வரை கல்லூரி வாழ்க்கை மற்றும் பள்ளி வாழ்க்கை நினைவு இருக்க வேண்டும். வாழ்க்கையின் திசையை காட்டுவது கல்விதான். 

Progress of students is the progress of Tamil Nadu says  Minister I. Periyasamy

சீவல்சரகு பகுதியில் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக சுயநிதி கல்லூரியாக தொடங்கப்பட்டு,  வகுப்புகள் தற்காலிகமாக ஜெயினி ஹெல்த் அண்ட் எஜிகேஷனல் டிரஸ்ட் நிறுவன வளாகத்தில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே எந்த கல்லூரியிலும் இல்லாத அளவிற்கு இக்கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கட்டணம், அரசு கல்லுாரி அளவிலான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023-ஆம் ஆண்டு கல்வியாண்டில் ஐந்து இளங்கலை பாடப்பிரிவுகளில் இளங்கலை கூட்டுறவு, இளங்கலை வரலாறு. இளங்கலை பொருளாதாரம், இளங்கலை வணிகவியல், இளங்கலை வணிகநிர்வாகம் ஆகிய பாடப்பிரிவுகளில் 300 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு முதலாமாண்டில் 226 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர். தொடர்ந்து, 2023-2024-ஆம் ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று, கூடுதலாக அனுமதிக்கப்பட்ட இரண்டு இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு(பி.ஏ.தமிழ் மற்றும் பி.காம்(சிஏ) 100 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 60 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு மொத்தமாக 486 மாணவர்கள் தற்போது பயின்று வருகின்றனர்.

கிராமப்புறங்களில் வசிக்கின்ற ஏழை எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப 2024-2025-ஆம் கல்வியாண் டிற்கான புதிய பாடப்பிரிவுகள் துவங்குவதற்கு ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பத்தை ஏற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஏழு இளங்கலை பாடப்பிரிவுகள் தொடங்கிட அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இளங்கலை ஆங்கிலம் 60 மாணவர்கள், இளங்கலை இயற்பியல் 40 மாணவர்கள், இளங்கலை வேதியியல் 40 மாணவர்கள், இளங்கலை விலங்கியல் 40 மாணவர்கள், இளங்கலை கணினி அறிவியல் 40 மாணவர்கள், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் 40 மாணவர்கள், இளங்கலை கணினி பயன்பாடு 40 மாணவர்கள் என மொத்தம் 300 மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அதில் 247 இடங்கள் சேர்க்கை முடிவுபெற்றுள்ளது. 2024-2025ஆம் கல்வி ஆண்டில் 14 இளங்கலை பாடப்பிரிவுகளில் 700 மாணவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கப்பட்டதில் தற்பொழுது 644 மாண வர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அனுமதி அளிக்கப்பட்ட பணிநிலைத்திறன்படி 30 பணியாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டு 2022-2023 கல்வியாண்டு முதல் ஒப்பந்த அடிப்படையில் உதவிப்பேராசிரியர்கள் 17 நபர்களும் அலுவலக பணியாளர்கள் 13 நபர்களும் பணிபுரிந்து வருகின்றனர். 2023-2024-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் 7 பணியாளருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உதவிப்பேராசிரியர்கள் 6 நபர்களும், காவலர் ஒருவரும் சேர்க்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். தற்பொழுது கல்லூரியில் 36 (22 உதவிப்பேராசிரியர்கள், 14 அலுவலக பணியாளர்கள்) பணிபுரிந்து வருகின்றனர்.

கிராமப்புற பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்தும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியின் அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இக்கல்லூரியின் சொந்தக்கட்டடம் இதே பகுதியில் 7 ஏக்கர் 57 சென்ட் நிலப்பரப்பில் ரூ.75.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. 24.02.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட பணிகள் வரும்  அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புதிய கட்டடத்தில் முழு அளவிலான ஆய்வக கட்டடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் மாணவர்கள் இக்கல்வியாண்டிலேயே பயில்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

ஏழைய எளிய மாணவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு சுயநிதி கல்லூரியாக அனுமதிக்கப்பட்ட நிலையிலும், அரசு கல்லூரியின் கல்விக்கட்டண தொகை ரூ.1,415 மட்டுமே இக்கல்லூரியில் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இங்கே அமைந்திருக்கும் மாணவர், அமைச்சர், விஞ்ஞானி ஆகிய பதவிகளில் பணியாற்ற வாய்ப்பு ஏற்டுத்தலாம். அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் பெரிய பதவிகளில் வர வாய்ப்புள்ளது.

மாணவர்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றமும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஆகும். முன்னேற்றம் என்பது மாணவ, மாணவிகளிடமிருந்து உருவாகிறது. நீங்கள் கஷ்டப்பட்டு படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். எனவே முதலாமாண்டு படிக்கும் மாணவர்களும், மூன்றாமாண்டு முடிக்கும் மாணவர்களும் உங்கள் வாழ்க்கையில் உயர்வை பெற வேண்டும். மேலும், இக்கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தப்படும்” என்று கூறினார்.                             

சார்ந்த செய்திகள்