“அய்யா வைகுண்டருக்கு ஸ்டிக்கர் ஒட்டும் ஆளுநர் ரவி” என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் கடுமையாக சாடியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் கோயில்களை பார்ப்பனீயப் பிடியிலிருந்து மீட்கப் போராடிவரும் மாபெரும் திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அதன் ஒரு பகுதியாக சமத்துவ தமிழ் மரபுகளை கையகப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது.
சிதம்பரத்தில் பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போடுவது, வள்ளுவருக்கு காவி சாயம் பூசுவது, வள்ளலாரை சனாதன சிமிழுக்குள் அடைப்பது, வைகுண்டரை பார்ப்பனிய மயமாக்குவது என்ற ஆன்மீக சித்து வேலைகளை பார்ப்பனிய அயோக்கியத்தனங்களை தமிழ்நாட்டின் சமத்துவ ஆன்மீகம் உறுதியாக நிராகரிக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மாபெரும் சமத்துவ மரபு கொண்ட தமிழ் ஆன்மீக சமூகம், ஆர்.எஸ்.எஸ், பாஜக, ஆளுநர் ரவி, அண்ணாமலையின் ஸ்டிக்கர் ஒட்டும் அரசியலை மோசடியான ஆன்மீகத்தை கடுமையாக எதிர்க்கிறது. வன்மையாகக் கண்டிக்கிறது.
பட்டியல் சமூகத்தினருக்கு பூணூல் போட்டு பார்ப்பனிய சிமிழுக்குள் அடைக்கும் ஆர்.என். ரவி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட பட்டியல் சமூகத்தை அனுமதிப்பாரா? தீட்சதர்களிடம் பேசுவாரா? தமிழகம் முழுக்க உள்ள சைவ, வைணவ கோயில்களில் பிறப்பால் பார்ப்பனர் தவிர மற்ற கவுண்டர், தேவர், நாடார், வன்னியர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட இந்து தமிழ் சாதியினரை அர்ச்சகராக்க கோரிக்கை வைப்பாரா? உண்மையில் இந்துக்களுக்கான கட்சி பாஜக எனில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பாஜக குரல் கொடுக்காதது ஏன்? தனது பார்ப்பனிய, சனாதன வைதீக ஆன்மீகத்தில் நம்பிக்கை அற்று, மாபெரும் தமிழ் சமய மரபை களவாடும் இக்கூட்டத்தை 2024 தேர்தலில் மொத்தமாக முறியடிப்போம்.
"அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம்; சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார் எனவும், ஆளுநர் ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். சனாதனம் பேசுகிற உருவ வழிபாடு என்ற அடிப்படைக்கே எதிரானவர் அய்யா. அய்யாவை வணங்கும் இடங்கள் சனாதனம் சொல்கிற கோவில்கள் எனவும் அழைக்கப்படுவது இல்லை. நீ வணங்கும் இறைவன் என்பவன் உனக்குள்தான் இருக்கிறான் என்கிற தத்துவத்தைச் சொல்கிறவர் அய்யா வைகுண்டர். சனாதனத்தின் அடிப்படை அம்சங்களை அடியோடு நிராகரித்தவரே அய்யா வைகுண்டர்.
மண்ணின் பூர்வ குடிகள் மீது மனிதகுல விரோதமான அடக்குமுறைகள் ஏவப்பட்ட காலம். அதாவது, பெண்கள் மார்பு சேலை அணிய தடை பெண்கள் இடுப்பில் குடம் சுமக்கவும் தடை, பெண்கள் நகைகள் அணியவும் தடை, ஆண்கள் தலைப்பாக கட்டத் தடை, ஆண்கள் மீசை வளர்க்கத் தடை, ஆண்கள் வளைந்த கைப்பிடி குடை, பயன்படுத்தத் தடை, இப்படித்தான் சனாதன தர்மத்தின் பேரால் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், வன்கொடுமைகள், அய்யா வைகுண்டர் காலத்தில் நிகழ்த்தப்பட்டன. இவை அனைத்தையும் அதாவது ஆளுநர் ரவி சொல்வது போலவே சனாதன தர்மத்தின் பேராலான இக்கொடுமைகளை அய்யா வைகுண்டர் ஏற்றாரா? எதிர்த்தாரா? என்பதற்கு சரித்திரத்தில் பதில் உள்ளது.
ஏனெனில் சனாதன தர்மத்தின் பெயரால் மேலே இழைக்கப்பட்ட கொடுமைகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க அய்யா வழி என சனாதனத்துக்கு எதிரான சமயத்தையே உருவாக்கியவர் அய்யா வைகுண்டர். அவரை இப்போது வலதுசாரிகள் கபளீகரம் செய்ய பார்க்கிறார்கள் என்பது தீவிர அய்யா வழி பக்தர்கள் கருத்தாக உள்ளது. இடுப்பில் துண்டும், தலையில் தலைப்பாகையும் கட்ட கூடாது என்றது சனாதனம். ஆனால் அய்யா வைகுண்டரோ துண்டை தலைப்பாகை கட்டு என கட்டளையிட்ட போராளி. அய்யா வழியில் இன்றும் தலைப்பாகை அணிவது இதற்குதான். ஒவ்வொரு அய்யா வழி பதியில் ஜாதி- மதம்- ஆண்- பெண் என ஒரு வேறுபாடும் இல்லை.
சனாதனம் கற்பித்த அத்தனை ஒடுக்குமுறைகளையும் காலந்தோறும் தகர்க்கும் வகையில் வலிமையான அய்யா வழி எனும் சமயத்தை தந்தவர் அய்யா வைகுண்டர். அய்யா வழி வழிபாட்டு முறை ஏதேனும் சனாதனத்தின் உயிர்நாடி சமஸ்கிருதத்தில் இருக்கிறதா? சனாதனம் நீஷபாசை என சொல்லும் தமிழில் இருக்கிறதா? என்றெல்லாம் ஆராயாமல் அள்ளிவிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ‘ஏடுதந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூடத் தந்தேன் பட்டங்களும் பட்டயமும் தந்து பகை தீர்ந்தேன் என் மகனே..’ என அய்யா வைகுண்டர் வலியுறுத்துவது எதனைத் தெரியுமா?
சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என சொன்ன சனாதனத்துக்கு எதிரான அய்யா வைகுண்டரின் சண்டமாருத முழக்கம் இது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்.. புரிந்தும் புரியாமல் பொய்யும் புனைபுரட்டுமாய் சனாதனம் பேசும் சக்திகளுக்கு எப்படி புரியும்? 2024 தேர்தலில் பாஜகவை மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் ஆளுநர் ஆர்.என். ரவியையும் வீட்டுக்கு அனுப்ப, தமிழ் ஆன்மீக உலகம் கோயில், கோயிலாகச் சென்று தனது பணியைச் செய்யும். தனது மரபை, ஆன்மீகத்தை பேணிப் பாதுகாக்கத் தவறிய எந்த ஒரு இனமும் வரலாற்றில் நீடிக்காது. நமது தனித்த சமத்துவ ஆன்மீக மரபை பாதுகாப்போம். ஆர்எஸ்எஸ் ஆளுநர் ரவி கூட்டத்தை நிராகரிப்போம்!
ஆரிய பார்ப்பனியத்தை வீழ்த்துவோம்! கோயில்களில் சமத்துவத்தை நிலைநாட்டப் போராடுவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.