தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (27.12.2019) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 15- வார்டில் அதிமுக, திமுக, நாம்தமிழர் கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 9 பேர் போட்டியிடுகின்றனர். இதில் சுயேட்சை வேட்பாளர் சேகருக்கு "ஸ்பேனர்" சின்னத்தை ஒதுக்கியிருந்தது மாநில தேர்தல் ஆணையம். அதைத் தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர் சேகர் ஸ்பேனர் சின்னத்தை மக்களிடம் காண்பித்து வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில் தேர்தல் நாளான இன்று (27.12.2019) வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சுயேட்சை வேட்பாளர் சேகரின் சின்னம் ஸ்பேனருக்கு பதிலாக ஸ்கூரு சின்னம் வாக்கு சீட்டில் அச்சிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வேட்பாளர் சேகர் எனது சின்னம் வாக்கு சீட்டில் இல்லை. அதனால் வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.
அதன் காரணமாக பாக்குடி மற்றும் அந்த வார்டுக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் வேட்பாளர் சேகர் வெற்றி பெறுவதைத் தடுக்க சதி செய்து சின்னத்தை மாற்றியுள்ளனர் என்று அவரின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரவும் வேட்பாளர் தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.