‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா பார்க்குறியா?’ போன்ற சிங்கம் சூர்யாவின் பஞ்ச் வசனங்கள் சினிமாவில் கைதட்டல் பெறுவதற்கு காரணமே பொதுமக்களுக்கு வில்லன்களாக இருக்கும் ரவுடிகளை புரட்டியெடுத்து பஞ்ச் வசனங்கள் பேசுவதால்தான். ஆனால், சிங்கம் சூர்யாபோல் கெட்-அப்பை மட்டும் மாற்றிக்கொள்ளும் பெரும்பாலான காக்கிகளோ மயில்வாகனம் போன்ற ரவுடிகளிடம் கைகோர்த்துக்கொண்டு மக்களுக்கு வில்லன்களாகத்தான் செயல்படுகிறார்கள்.

சமீபகாலங்களாக, தலைக்கவசம் அணியாமலோ... ஆவணங்கள் இல்லாமலோ... குடித்துவிட்டோ பயணிக்கும் டூவீலர் ஓட்டிகளை நிறுத்தி சட்டப்படி கட்டணம் வசூலித்து ஹெல்மெட் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காக்கிகள் மத்தியில்… லஞ்சவேட்டை நடத்துவது, சண்டை போடுபவர்களை தூண்டிவிட்டு வீடியோ எடுத்து... பிறகு, கையை உடைக்கும் புதிய ஆபரேஷனை ஆரம்பித்திருக்கிறார்கள். ஒருசில காக்கிகள். சரி... குடித்துவிட்டு போலீஸாரை தாக்குவது மிகவும் தரகுறைவான வார்த்தைகளில் பேசுவது என எல்லை தாண்டுகிறவர்கள்தான் அப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்று பொதுமக்களும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், பொதுமக்களைவிட சட்டத்தை மதிக்கவேண்டிய பொறுப்புள்ள போலீஸார் எப்படியிருக்கிறார்கள்?

மீசையை முறுக்கிக்கொண்டு டூவீலரில் அமர்ந்து போஸ் கொடுக்கும் இந்த காவலரின் பெயர் துரை. சுற்றுப்புறச் சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் டீசல் புல்லட்டை வைத்திருப்பதோடு நம்பர் ப்ளேட்டில் நம்பரே இல்லாமல் அதற்கு பதிலாக 'போலீஸ்' என்று எழுதிவைத்துள்ளார். இதுகுறித்து, நம்மிடம் பேசிய சோஷியல் மீடியா நண்பர் ஒருவர் நம்மிடம், “அவரது, முகநூலில் வெளியிட்ட இப்புகைப்படத்தில் போலீஸாக இருந்துகொண்டு நீங்களே இப்படி நம்பர் ப்ளேட்டில் நம்பர் எழுதாமல் இருக்கலாமா? என்று கேட்டபோது, நம்பர்தான வேணும்… வண்டியோட பேக் சைடுல இருக்கு என்று நக்கலாக பதில் அளித்தார். பொதுமக்களைவிட போலீஸுக்குத்தான் சட்டத்தை மதிக்கவேண்டிய கூடுதல் பொறுப்பு இருக்கு. அதனால, உங்க உயரதிகாரிகள் கேட்குறதுக்குள்ள மாற்றிக்கோங்க’ என்று சொன்னபோது, போலீஸ் என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுன்னு தெரியும். நான் யாரு என் கேரக்டர் என்ன? தெரியுமா உனக்கு?ன்னு மிரட்ட ஆரம்பிச்சுட்டார்.
இப்படி, வாகன எண்ணுக்கு பதிலாக ஒவ்வொருவரும் அவர் வகிக்கும் பதவிகளை எழுத ஆரம்பிச்சா என்ன ஆகும்? சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியே போலீஸே இப்படி இருக்கலாமா? அதுவும், எப்போதுபார்த்தாலும் சினிமா பாடல்களுக்கு ‘டிக்டாக்’ பதிவு செய்து போடுவதே வேலையாக வைத்திருக்கிறார். இதைவிடக்கொடுமை… குழந்தைகளுடன் அவர் செய்யும் டிக்டாக்குகள் முகம் சுளிக்கவைக்கின்றன. பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு ஃபேஸ்புக்கில் டிக்டாக் வீடியோ போடுவதையே முழுநேர பணியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இவர், உண்மையிலேயே போலீஸ்தானா? என்றும் ஆய்வு செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?’ என்றார் வேதனையோடு.
நாமும், பொதுமக்களில் ஒருவரைப்போல் நம்பர் இல்லாத புல்லட் துரையின் ஃபேஸ்புக்கிற்குள் நுழைந்து பேசினோம். என்ன வேலை பார்க்குறீங்க? என்றவரிடம் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று நாம், சும்மா லுளு லுளுவா செய்தபோது நம்மிடமும் அதேபோல், நீ வா போ என்று ஒருமையில் பேசி தனது மிரட்டல் வேலையை ஆரம்பித்தார். போலீஸுன்னா என்னன்னு தெரியுமாலே? போலீஸ் பத்தி பேசுற… ஏன் இந்த வேல? உன்னால என்ன பண்ணமுடியுமோ பண்ணிக்கோ. போலீஸ் என்ன செய்யணும்… செய்யக்கூடாதுன்னு அவனுங்களுக்கு தெரியும்… ஆம்பளையா இருந்தா ஃபேஸ்புக் கால் அட்டெண்ட் பண்ணிப்பேசுடா’ என்றெல்லாம் மிரட்டல் தொனியில் பேசியதோடு இழிவுபடுத்தியும் பேச ஆரம்பித்தார். ஆனால், எந்த ஸ்டேஷனில் பணிபுரிகிறீர்கள்? என்று பலமுறை கேட்டபோதும் சொல்ல மறுத்துவிட்டார். நம்பர் ப்ளேட்டில் நம்பரை பதிவு செய்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தால் பிரச்சனை முடிந்தது. ஆனால், நான் ஒரு போலீஸ்… எனக்கு ஒரு பப்ளிக் வந்து அட்வைஸ் செய்வதா? கேள்வி கேட்பதா? என்கிற திமிர்தான் நாளை காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்கவரும் பொதுமக்களிடமும் அதே திமிர்த்தனத்துடன் செயல்படவைக்கும்.

இதேபோல்தான், காவல்துறையினர் என்பவர்கள் அனைத்து மதத்தினருக்கும் சாதியினருக்கும் பொதுவானவர்கள். யார் புகார் கொடுத்தாலும் சாதி மதம் பார்க்காமல் செயல்படவேண்டும் என்பதால்தான் சாதி மத அடையாளங்களோடு செயல்படக்கூடாது. ஆனால், டி.எஸ்.பி. பாலதண்டாயுதபாணியோ தனது பெயருக்கு பின்னால் பாலதண்டாயுதபாணி வாண்டையார் என்று முகநூலில் குறிப்பிட்டுள்ளார். இசக்கி என்கிற இன்ஸ்பெக்டருக்கு அவரது ஆதரவாளர்கள் இசக்கிதேவர் என்று போட்டு வாழ்த்து தெரிவிக்கிறார்கள். அவர்களது, ஆதரவாளர்களை கண்டித்து அதுபோன்ற பதிவுகளை அந்த இன்ஸ்பெக்டர் நீக்கவில்லை.


இதைவிடக் கொடுமை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டபோது பால் பாண்டியன் என்ற காவலர் ’அப்படித்தாண்டா வாயிலேயே சுடுவோம்’ என்று முகநூலில் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் வன்முறையை தூண்டும் அளவுக்கு அவரது முகநூல் பதிவுகள் அமைந்தன. அவர், இடமாறுதல் மட்டும்தான் அடைந்தாரே தவிர வேறு தண்டனையும் கொடுக்கப்படவில்லை. இப்படி, காவல்துறை சட்டத்துக்குப்புறம்பாக எந்தக் குற்றத்தை செய்தாலும் சட்டப்படி தண்டிக்காமல் இடமாறுதல் மட்டுமே கொடுப்பதால்தான் பொதுமக்களைவிட குற்றங்கள் புரியும் காவல்துறையின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சட்டம் அனைவருக்கும் சமம்… காவல்துறையிலுள்ளவர்கள் இன்னும் சட்டத்தை மதித்து பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டும். அதுதான், சிங்கம் சூர்யாபோல் கெத்தாக இருக்குமே தவிர… படத்தில் வரும் சிங்கம் சூர்யாவைப்போல் கெட்-அப்பை மட்டும் மாற்றிக்கொண்டால் அது பள்ளிக்குழந்தைகள் ஆண்டுவிழாக்களுக்கு மாறுவேடப்போட்டிக்கு செல்வதுபோன்றதுதான். சிங்கம் சூர்யாவாக இருக்கவேண்டுமா? அசிங்கம் சூர்யாவாக இருக்கவேண்டுமா? என்பதை பொதுமக்களுக்கு நண்பனாகவும் ரவுடிகளுக்கு எதிரியாகவும் இருக்கும் செயல்பாடுகள்தான் தீர்மானிக்கும்!