'காவல் நிலையங்கள் இனி இளமையான காவல் நிலையங்களாகக் காட்சியளிக்கும்' என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
'நான் முதல்வன்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பேசுகையில், ''பத்தாயிரம் காவலர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறோம். அவர்கள் அடுத்தகட்ட காவல் நிலைய பயிற்சியில் இருக்கிறார்கள். அதே போல் ஆயிரம் உதவி காவல் ஆய்வாளர்களை ஒரு வருடப் பயிற்சி கொடுத்து, அதன் பிறகு ஆறு மாதப் பயிற்சி கொடுத்து வருகின்ற 27 ஆம் தேதி முடிந்ததும் மார்ச் 1 ஆம் தேதி காவல் நிலையத்திற்கு வருவார்கள். அது இல்லாமல், இன்னும் 444 சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். இதற்குப் பிறகும் சுமார் 600 காவல் உதவி ஆய்வாளர்கள் தேவை. சில வாரங்களில் அதற்கான அறிவிப்பு வரும். இப்படி காவல்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்பதற்கு முன்னாடியே ரெக்ரூட்மெண்ட் நடந்து கொண்டிருக்கிறது. இன்ஸ்பெக்டர், டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டர், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்தவர்களுக்காக சைபர் க்ரைமில் இன்வெஸ்டிகேஷன் செய்வதற்கு முழு அளவில் வருடா வருடம் வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதன் மூலமாக இனி காவல் நிலையங்கள் ரொம்ப இளமையாகக் காட்சியளிக்கும். அங்கே போகிறவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். 2,300 பேர் ஒட்டுமொத்தமாக காவல் நிலையங்களில் நிலைய வரவேற்பு அதிகாரிகளாக போட்டிருக்கிறோம். இன்றுகூட சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்றேன். பீளமேடு காவல் நிலையம் சென்றேன். மிகச்சிறப்பாக பொதுமக்களை உட்கார வைத்து அவர்களின் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து குறைகளை எல்லாம் எழுதி, விசாரணைக்கு பின் குறைகள் நீங்கிவிட்டதா என்று கூப்பிட்டு கேட்கும் அளவிற்கு நிறைய வரவேற்பாளர்களை நியமித்துள்ளோம். இதன் மூலமாக காவல்துறையின் சேவையின் தரம் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்'' என்றார்.