சர்வதேக கடத்தல்களின் மையமாக இலங்கை உள்ள நிலையில் இந்தியாவுக்கு தங்கமும், இந்தியாவில் இருந்து கஞ்சா போன்ற பொருட்களையும் கடத்தல் கும்பல்கள் கடத்திச் செல்கிறது. இதற்கு தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியை, சர்வதேச கடத்தல் கும்பல் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக பண்டல் பண்டலாக வாங்கப்படும் கஞ்சா பண்டல்கள் கிழக்கு கடற்கரை வரை கார்களில் கடத்தி வந்து, பிறகு கடல் மார்க்கமாக மீனவர்கள் போல இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல நூறு கோடிகள் மதிப்புள்ள பல டன் கஞ்சா மற்றும் கஞ்சா லேகியம் பிடிபட்டுள்ளது. ஆனால் பிடிபடாமல் பல நூறு டன் கஞ்சா இலங்கை போய் சேரந்திருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
கிழக்கு கடற்கரை வழியாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை அறிந்த போலீசார், தங்கள் உள்வாளிகள் மூலம் தகவல் பெற்று பல கடத்தல் கஞ்சா பண்டல்களை கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில், ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா பண்டல்கள் சென்னையில் பாதியை இறக்கி வைத்துவிட்டு, மீதியை புதுக்கோட்டை - அறந்தாங்கி வழியாக ராமநாதபுரம் தொண்டி கடற்கரைக்கு கொண்டு போய் அங்கிருந்து இலங்கைக்கு அனுப்ப உள்ளனர் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்திருந்தது. இந்த தகவலையடுத்து புதுக்கோட்டை எஸ்.பி வந்திதா பாண்டே, மாவட்ட போலீசாரை அலார்ட் செய்திருந்தார்.
இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமாக ஒரு சிவப்பு நிற கார் மற்றும் 2 பைக்கள் அறந்தாங்கி சாலையில் வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார், குரும்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் பைக்குகளை போலீசார் நிறுத்தினர். அப்போது அந்த காரில் வந்த ஒரு நபர் தப்பி ஓடிவிட, மற்ற 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின்னாக பதில் சொன்னதால் காரை சோதனை செய்தனர். அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கார் மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரனை நடத்தினர். அதில், அவர்கள் சென்னை, எம்.ஏ நகர், முண்டியம்மன் கோயில் தெரு பாரதிராஜா மகன் நாகராஜன் (20), ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், புழுதிக்குளம், சேதுபதி நகர் கனகராஜ் மகன் தவமுருகன் (26), புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தர்மலிங்கம் மகன் ஸ்டாலின் கிரிஸ்டோபர்(36) என்று தெரியவந்தது. காரில் தப்பி ஓடியவர் சென்னை பாடியநல்லூர் ஜோதி நகர் போஸ் மகன் ராகுல் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, தப்பி ஓடிய ராகுலை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பேரில், தலைமறைவாகி இருந்த ராகுலை போலீசார் பிடிக்க முயன்ற போது, அவர் தப்பியோட முயற்சித்துள்ளார். இதில் அவர் தடுமாறி விழுந்து கால்முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சொன்ன தகவலின் பேரில் சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ கஞ்சா பண்டல்களையும் போலிசார் கைப்பற்றினர். சம்பவம் குறித்து அறந்தாங்கி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.