Skip to main content

ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நினைவில்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கையைப் பாராட்டியிருப்பார்!- உயர்நீதிமன்றத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

poes garden chennai high court chennai district collector

 

பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பாகப் பாராட்டியிருப்பார் என்று உயர்நீதிமன்றத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீடான ‘வேதா நிலைய’த்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவெடுத்து, அதைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையை அமர்வு நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளது.

 

‘வேதா நிலையம்’ கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் வழக்கு தொடர்ந்தார். மேலும், வீட்டிற்கு இழப்பீடு தொகையை நிர்ணயித்து, அந்தத் தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் செலுத்தியதை எதிர்த்து, தீபாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

இந்த வழக்குகள், நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபக் வழக்கிற்கு சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி பதில் மனு தாக்கல் செய்தார். அதில்,‘வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து சட்டசபையில் முதல்வர் பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்டு 17-ஆம் தேதி அறிவித்ததையடுத்து, கையகப்படுத்தவும், அதற்கான இழப்பீடு நிர்ணயிக்கவும், சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர், அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த பிறகே, கையகப்படுத்தும் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

 

பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், ‘வேதா நிலைய’த்தை அரசு கையகப்படுத்தி, நினைவு இல்லமாக மாற்றும் நடவடிக்கையைக் கண்டிப்பாக பாராட்டியிருப்பார். ஜெயலலிதா அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டபோது, அவருடன் ஜெ.தீபக் உடனிருந்தது இல்லை. 

 

மேலும், தமிழக மக்களைத் தன் குடும்பத்தினராக நினைத்து, ஓய்வில்லாமல் உழைத்த ஜெயலலிதாவின் உழைப்பையும், தமிழக முன்னேற்றத்துக்கான அவரது பங்களிப்பையும், மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக, நினைவு இல்லமாக மாற்ற மனப்பூர்வமான முடிவை அரசு எடுத்துள்ளது. 

 

‘வேதா நிலைய’த்தை நினைவு இல்லமாக மாற்றும்போது, மிகச்சிறந்த தலைவர் வாழந்த இடத்தைப் பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வருவார்கள். குடியிருந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, சுற்றுச்சூழல் பாதிப்பு சான்றிதழ் எதுவும் தேவையில்லை. எனவே, தீபக்கின் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்.’என மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜனவரி 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, நீதிபதி என்.சேஷசாயி உத்தரவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்