உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் வகையில் பிரதமர் மோடி நாளை சென்னை வரும் போது கருப்புக் கொடி காட்டுவது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
ஏற்கனவே அறிவித்தவாறு திமுக மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று அறிவித்த மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் வேதனை, கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு உடை அணிந்து, வீடுகளில் கருப்புக் கொடிகள் ஏற்றப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சி தொண்டர்கள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இது தவிர கட்சி அலுவலகம், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கருப்பு உடை, கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கவும் விமான நிலையம் அருகில் திமுக மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த முன்னணியினர் தொண்டர்கள் ஒன்று திரண்டு பிரதமருக்கு கருப்பு கொடி காட்டவும் அனைத்துக் கட்சிகள் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில் சென்னை தலைமைச் செயலகத்தில், பிரதமருக்கு பாதுகாப்பு மற்றும் கருப்புக் கொடி போராட்டத்தை சமாளிப்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அப்போது, கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் தலைவர்களை முன்கூட்டியே கைது செய்ய போலீசார் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.