விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 3 டாஸ்மார் கடைகள் இயங்கி வந்தன. நீதிமன்ற உத்தரவுபடி சில தினங்களுக்கு முன்னர் இந்த கடைகள் மூடப்பட்டன. இதனால் கள்ளத்தனமாக மது விற்போர் அதிக விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது. இதனிடையே மலிவு விலைக்கு மதுபானம் விற்கக் கோரி காரியாபட்டி வட்டார குடிப்போர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் கந்தன், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பது,
காரியாப்பட்டியில் குடியிருக்கும் நாங்கள் தினந்தோறும் குடித்து வருகிறோம். நீதிமன்ற உத்தரவுபடி நகரில் இருந்த 3 கடைகள் மூடப்பட்டன. திருட்டுத்தனமாக நகரில் உள்ள பேரூராட்சி சந்தையில் ரூ.200க்கு குவாட்டர் பாட்டிலை விற்கின்றனர். ஏழைகளாகிய எங்களால் அதிகமாக பணம் கொடுத்து குடிக்க முடியவில்லை.
மேலும் டாஸ்மாக் கடைக்காக 20 கி.மீ தூரமுள்ள நரிக்குடி பகுதிக்கு செல்ல வேண்டும். எனவே முதல்வர் கருணை கூர்ந்து மலிவு விலையில் மதுபானம் கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.