நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில் அதன் விளைவாக மாநில அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். நேற்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் தூத்துக்குடியில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியில் மொத்தம் ஐந்து பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 55 வயது கொண்ட ஆண் ஒருவர் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு போன்ற இணை நோய் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.